அமர்சிங் உடல்நிலை : நீதிபதி உத்தரவு
அமர்சிங் உடல்நிலை : நீதிபதி உத்தரவு
அமர்சிங் உடல்நிலை : நீதிபதி உத்தரவு
ADDED : செப் 08, 2011 11:36 PM

புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., அமர்சிங்கின் உடல் நிலை குறித்த அறிக்கையை அளிக்கும்படி, சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2008ல், பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.,க்களுக்கு, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 'அமர்சிங், சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவர் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தினால், அவரது சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாது, அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இம்மாதம் 9ம் தேதி, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும்' என, அமர்சிங்கின் வழக்கறிஞர் ஹரிஹரன் கோரினார். 'அமர்சிங்கின் உடல் நிலை குறித்து, சிறை கண்காணிப்பாளரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அந்த அறிக்கையின்படி அவரது ஜாமின் மனு பரிசீலிக்கப்படும்' என, நீதிபதி சங்கீதா திங்ரா செகல் குறிப்பிட்டார். அமர்சிங்குடன் கைது செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.,க்கள் பகன் சிங் குலாஸ்தி, மகாவீர் சிங் பக்கோரா ஆகியோரும், ஜாமின் கோரி மனு செய்துள்ளனர். இவர்களது மனு, 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.


