/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்தல் பார்வையாளர் விரைவில் நியமனம்தேர்தல் பார்வையாளர் விரைவில் நியமனம்
தேர்தல் பார்வையாளர் விரைவில் நியமனம்
தேர்தல் பார்வையாளர் விரைவில் நியமனம்
தேர்தல் பார்வையாளர் விரைவில் நியமனம்
ADDED : செப் 25, 2011 10:27 PM
திருப்பூர் : உள்ளாட்சி தேர்தல் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 22ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 29ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வரும் 30ம் தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது; அடுத்த மாதம் 3ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் 265 ஊராட்சிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது; ஓட்டுப்பதிவுக்கு 2,434 ஓட்டுச் சாவடிகள் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களிடம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. வேட்பு மனுக்கள் பெறத்துவங்கிய கடந்த 3 நாட்களில் அதிகளவில் எண்ணிக்கையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும், வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதையடுத்து, இனி வேட்பு மனுத்தாக்கல் பணி சுறுசுறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை என்பதாலும், நாளை அமாவாசை என்பதாலும் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை என்பதால் அன்று அதிகளவில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வது சந்தேகம்தான்; மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான 29ம் தேதி அதிகளவில் மனுக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் மாநில தேர்தல் கமிஷன், அதிகளவிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நாட்களில் மனுக்கள் பெறும் பணிக்கு கூடுதல் அலுவலர்களை பணியமர்த்திக் கொள்ள அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எக்காரணம் கொண்டும் மனு பெறுவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் இதற்காக கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த ஏற்பாடு செய்துள்ளனர்.தேர்தல் பார்வையாளர்கள்:சட்டசபை தேர்தலின் போது மாவட்ட வாரியாக தேர்தல் பாதுகாப்பு பார்வையாளர், தேர்தல் செலவு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்; 2 தொகுதிகளுக்கு ஒரு தேர்தல் பார்வையாளரும் நியமிக்கப்பட்டிருந்தனர். உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்தவரை மாவட்ட அளவில் ஒன்று அல்லது இரண்டு தேர்தல் பார்வையாளர் மட்டும் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பார்வையாளர்கள் வேட்பு மனுத்தாக்கலுக்கு இறுதி நாளில் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் வேட்பு மனு பரிசீலனை, சின்னம் ஒதுக்கீடு, வேட்பாளர் பிரசாரம் மற்றும் தேர்தல் செலவு குறித்து கண்காணிப்பு மேற்கொள்வர். இது தவிர தேர்தல் அலுவலர்களின் பணி, ஓட்டுச் சாவடி மையங்கள், ஓட்டுப்பதிவு பணிகள் ஆகியன முதல் எண்ணிக்கை வரையிலான பணிகளை கண்காணிக்க உள்ளனர்.