/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வாகைகுளத்தில் மரங்களை வெட்ட கிராம மக்கள் எதிர்ப்புவாகைகுளத்தில் மரங்களை வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
வாகைகுளத்தில் மரங்களை வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
வாகைகுளத்தில் மரங்களை வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
வாகைகுளத்தில் மரங்களை வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி அருகே வாகைகுளத்தில் வெளிநாட்டு பறவைகள் தங்கும் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டதால் நான்கு கிராம மக்களின் எதிர்ப்பால் சுமார் 5 மணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு பின்னர் 6 மாதம் கழித்து தங்களின் நாடுகளுக்கு திரும்பிவிடுவது வழக்கம். கூந்தன்குளத்தை அடுத்து வாகைகுளத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் இப்பறவைகளுக்கு உணவாக குளத்தில் உள்ள மீன்கள் பயன்படும். மேலும் இப்பறவைகளின் எச்சங்கள் குளத்துநீரில் கலந்து சக்திவாய்ந்த உரமாக விவசாயத்திற்கு பயன்படுகிறது.
இம்மரங்களை கடந்த 2007ல் வெட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நெல்லை சமூகவனக்கோட்டம் கோட்ட வன அலுவலகம் சார்பில் இங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்டனர். நாணல்குளம், வாகைகுளம், வீராசமுத்திரம், மாலிக்நகர் பொதுமக்கள், ஏட்ரி அமைப்பு, சமூகநல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்போதைய கலெக்டர் ஜெயராமன் மற்றும் ஆர்டிஓ ரமணசரஸ்வதி ஆகியோர் வாகைகுளத்தை பார்வையிட்டு இங்குள்ள பறவைகளையும், அருகில் உள்ள கல்லூரி விலங்கியல் துறையினர் மற்றும் பேராசிரியர்கள் மூலம் ஆய்வு செய்து இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
இதன் பேரில் முறையாக பறவைகள் சரணாலயம் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் இதனையெல்லாம் தெரியாத நிலையில் சமூகவன காடுகள் கோட்ட வன அலுவலகத்திலிருந்து கருவேல மர குத்தகைதாரர் தற்போது தண்ணீர் இல்லாததால் மரங்களை வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார். மரங்கள் வெட்டுவதை அறிந்த நாணல்குளம், வாகைகுளம், வீராசமுத்திரம், மாலிக்நகர் பொதுமக்கள் மரம் வெட்டுவதை நிறுத்தக்கோரி பிரச்னை செய்தனர்.
இத்தகவல் அறிந்த அம்பை தாசில்தார் தியாகராஜன், மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால், விஏஓ முருகன், கடையம் ஒன்றிய ஆணையாளர் சிவகாமசுந்தரி, சிறுசேமிப்பு விரிவாக்க அலுவலர் திலகராஜ், சமூகநல ஆர்வலரும், பரமகல்யாணி கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியருமான சுதாகரன் மற்றும் ஆழ்வார்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்பிரிவு சிதம்பரம், ஏட்ரி நிறுவனத்தினர் ஆகியோர் வாகைகுளத்திற்கு வந்து குத்தகைதாரர் ஜெரால்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும், பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான நடவடிக்கையில் வாகைகுளம் இருப்பதாலும், தற்போது தேர்தல் வேலைகள் இருப்பதாலும் மரங்களை வெட்டக் கூடாது என அதிகாரிகள் முடிவெடுத்ததால் மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டது. சிறியதும், பெரியதுமான சுமார் 100 மரங்கள் இருக்கும் நிலையில் 6 பெரிய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. நிரந்தரமாக மரம் வெட்டுவதை நிறுத்தி விரைவில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் 5 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


