Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவை - ராமேஸ்வரம் ரயில்; நாளையுடன் கடைசி பயணம்

கோவை - ராமேஸ்வரம் ரயில்; நாளையுடன் கடைசி பயணம்

கோவை - ராமேஸ்வரம் ரயில்; நாளையுடன் கடைசி பயணம்

கோவை - ராமேஸ்வரம் ரயில்; நாளையுடன் கடைசி பயணம்

ADDED : அக் 06, 2011 05:32 PM


Google News

ஈரோடு: கோவை - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் நாளையுடன் நிறுத்தப்படுகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் செல்ல, நேரடி ரயில் வசதியில்லை. பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, ஆகஸ்ட் 6ம் தேதி முதல் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்துக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டது. ஒவ்வொரு சனியன்றும், இரவு, 7.45 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த ரயில், ஈரோட்டுக்கு இரவு, 9.20 மணிக்கும், ராமேஸ்வரத்துக்கு காலை, 7 மணிக்கும் சென்றது. மறு மார்க்கத்தில் ஞாயிறு தோறும் ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது.

ரயிலில் முதல் வகுப்பு பெட்டி ஒன்று, மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டி இரண்டு, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஒன்பது, பொதுப்பெட்டிகள் நான்கு இயக்கப்பட்டன. முதல் வகுப்பு கட்டணம், 676 ரூபாய், மூன்றடுக்கு, 'ஏசி' 601 ரூபாய், இரண்டாம் வகுப்பு, 224 ரூபாய், சாதாரண வகுப்பில், 109 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பரிசோதனை அடிப்படையில் மூன்று மாதத்துக்கு இந்த ரயில் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, நாளை கோவையில் இருந்தும், வரும், 9ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்தும் தன் கடைசி பயணத்தை இந்த ரயில் மேற்கொள்கிறது.

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, கோவை - திருச்சி இடையே வியாபார நிமித்தமாக பயணிப்பவர்களுக்கும், இந்த ரயில் பெரிதும் உதவியாக இருந்தது. இயக்கப்பட்ட மூன்று மாத காலமும், இந்த ரயில் மூலம் நல்ல வருவாய் கிடைத்தது. வாராந்திர ரயிலை, தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என, மேற்கு மண்டல மக்கள் கோரி வந்தனர். இவ்வேளையில், நாளையுடன் இந்த ரயில் நிறுத்தப்படுவது, பயணிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு ரயில்வே முன்பதிவு மையத்தில், இந்த ரயிலுக்கு நாளையும், மறுமார்க்கத்தில், 9ம் தேதியுடன் முன்பதிவு நிறுத்திக் கொள்ளப்பட்டது. அடுத்த வாரங்களில் முன்பதிவு மறுக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us