பா.ஜ., மேயர் வேட்பாளர் மனு:10ம் தேதி விசாரணை
பா.ஜ., மேயர் வேட்பாளர் மனு:10ம் தேதி விசாரணை
பா.ஜ., மேயர் வேட்பாளர் மனு:10ம் தேதி விசாரணை
ADDED : அக் 03, 2011 11:41 PM
சென்னை;சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு அளிக்கப்பட்ட வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை, 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரகுமர் ஹிராவத் தாக்கல் செய்த மனு:மாநகராட்சி மேயர் தேர்தலில், பா.ஜ., சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்தேன். வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. வார்டு எண், பகுதி எண்ணை சரியாக அளித்திருந்தாலும், அந்த விவரங்களை தேர்தல் அதிகாரி சரிபார்க்க மறுத்து விட்டார். மனுவை நிராகரித்து விட்டார். எனக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை.என் மனுவை ஏற்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். மனு நிராகரித்ததை ரத்து செய்ய வேண்டும். மேயர் தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை விடப்பட்டுள்ளதால், 4ம் தேதி (இன்று) தான் விடுமுறை கால கோர்ட் செயல்படுகிறது. இருந்தாலும், இம்மனுக்களை விசாரிக்க, நேற்று கோர்ட்டுக்கு நீதிபதி அரிபரந்தாமன் வந்தார்.அவரது சேம்பரில் விசாரணை நடந்தது. பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜேந்திரகுமார் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடந்தது. விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு நீதிபதி அரிபரந்தாமன் தள்ளிவைத்தார்.இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. வேறு சில மனுக்கள் மீதான விசாரணையை, இன்றைக்கு தள்ளிவைத்தார். பிற்பகலில் தொடங்கிய விசாரணை, மாலை 5.30 மணி வரை நடந்தது.


