தேர்தல் வேளையில் மது விற்பனை குறைவு!
தேர்தல் வேளையில் மது விற்பனை குறைவு!
தேர்தல் வேளையில் மது விற்பனை குறைவு!
ADDED : அக் 07, 2011 12:52 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் நடக்கும் மது விற்பனை ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. மதுவிலக்கு போலீஸாருடன் இணைந்து டாஸ்மாக் அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு நடத்த முடிவு செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் 252 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், மாநகரப்பகுதியில் மட்டும் 40 கடை, நகராட்சி பகுதியில் 57 கடை, டவுன் பஞ்சாயத்து பகுதியில் 73 கடை, கிராமப்புறங்களில் 82 கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இக்கடைகளில் மாதந்தோறும் சராசரியாக ஐ.எம்.எஃப்.எல்., எனப்படும் பிராந்தி, விஸ்கி, ரம் உள்பட மதுவகைகள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 187 பெட்டிகள், பீர் வகைகளில் 56 ஆயிரத்து 715 பெட்டிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஐ.எம்.எஃப்.எல்., மதுவகைகள் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 377 பெட்டிகள், பீர் வகைகளில் 79 ஆயிரத்து 70 பெட்டிகளும் விற்பனையாயின. இதன்மூலம் 61 கோடியே 96 லட்சத்து 5,080 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது அரசு நிர்ணயித்த இலக்கை விட ஐ.எம்.எஃப்.எல்., மதுவகைகளில் 129 சதவீதமும், பீர் வகைகளில் 139 சதவீதமும் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.செப்டம்பரில் ஐ.எம்.எஃப்.எல்., மதுவகைகள் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 269 பெட்டிகளும், பீர் வகைகளில் 79 ஆயிரத்து 822 பெட்டிகளும் விற்பனையாயின. இதன்மூலம் 60 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 180 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது அரசு நிர்ணயித்த இலக்கை விட ஐ.எம்.எஃப்.எல்., மதுவகைகளில் 125 சதவீதமும், பீர் வகைகளில் 141 சதவீதமும் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
ஆனால், ஆகஸ்ட் விற்பனையை காட்டிலும்; செப்டம்பரில் ஒரு கோடியே 25 லட்சத்து 95 ஆயிரத்து 900 ரூபாய் விற்பனை அளவு குறைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரையில் நடந்தது. வேட்புமனு பரிசீலனை 30ம் தேதி நடந்தது. அதனால், மதுவிற்பனை கடந்த மாதத்தை விட அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மது விற்பனை குறைவு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டாஸ்மாக் கடைகளில் வெளிமாநில கடத்தல் மதுவகை அல்லது உள்ளூரில் போலியாக தயாரிக்கப்படும் மதுவகைகள் அதிகளவில் விற்பனை நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடைகள் மற்றும் பார்களில் மதுவிலக்கு போலீஸாருடன் இணைந்து டாஸ்மாக் அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு நடத்த முடிவு செய்துள்ளனர்.


