Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு மருத்துவமனை கட்டட விரிசல்களை சீரமைக்க சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

அரசு மருத்துவமனை கட்டட விரிசல்களை சீரமைக்க சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

அரசு மருத்துவமனை கட்டட விரிசல்களை சீரமைக்க சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

அரசு மருத்துவமனை கட்டட விரிசல்களை சீரமைக்க சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

ADDED : செப் 08, 2011 03:38 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த கூட்டத்திற்கு மாநில சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் டாக்டர் பங்கஜ் குமார் பன்சால் தலைமை தாங்கினார். கலெக்டர் மணிமேகலை, டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளின் பணிகள் குறித்தும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களின் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் சுகாதார துறை திட்ட இயக்குனர் டாக்டர் பங்கஜ் குமார் பன்சால் பேசியதாவது :அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் கால்வாய்களை அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடைபெறும் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். திண்டிவனம், சங்கராபுரம் மருத்துவமனைகளில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளில் கட்டுமான பணிகளை நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டடங்களில் ஏற்பட்டுள்ள மழைநீர் கசிவு, சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களை (மழைகாலம் துவங்குவதற்கு முன்) இம்மாத இறுதிக்குள் சீரமைக்க வேண்டும்.சுகாதாரத்தை பேணுவதற்கு ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதிய கடைநிலை பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் மருத்துவமனையை பராமரிக்க வேண்டும். எந்த நிலையிலுள்ள மருத்துவ அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் சரிவர கடமையை செய்யாமலிருந்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு சுகாதார துறை திட்ட இயக்குனர் டாக்டர் பங்கஜ் குமார் பன்சால் தெரிவித்தார்.அரசு மருத்துவ கல்லூரி டீன் தேன்மொழிவள்ளி, கண்காணிப்பாளர் நீதிபதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் விழுப்புரம் மீரா, கள்ளக்குறிச்சி கீதா, சென்னை மருத்துவத்துறை இயக்குநரக துணை இயக்குனர்கள் கீதா, குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us