Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் அவசர கால உதவி மையம் துவக்கம்

திருச்சியில் அவசர கால உதவி மையம் துவக்கம்

திருச்சியில் அவசர கால உதவி மையம் துவக்கம்

திருச்சியில் அவசர கால உதவி மையம் துவக்கம்

ADDED : ஆக 19, 2011 11:06 PM


Google News
திருச்சி: வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை வகித்து பேசியதாவது: வடகிழக்குப் பருவமழை வரும் செப்டம்பர் துவங்கவுள்ளது. மழை, புயல் வெள்ளக் காலங்களில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வருவாய், பொதுப்பணி, வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள ஏரி, குளம், வாய்க்கால் ஆகியவற்றை பார்வையிட்டு கரைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பே நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பு அகற்றப்பட வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் ஆற்றுப்படுகைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை பொதுப்பணித்துறையினரும், வருவாய்துறையினுரும் இணைந்து உடனடியாக அகற்ற வேண்டும். புயல், வெள்ளக் காலங்களில் இடர்பாடு ஏற்படும் போது, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க புயல் பாதுகாப்பு மையங்கள், அரசு கட்டங்கள் ஆகியவற்றை பராமரித்து அங்கு தேவையான வசதிகள் செய்து வைக்க வேண்டும். உயர் அலுவலர்கள் தலைமையிடத்தில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். துறைகளின் தலைமை அலுவலர்கள் கலெக்டர் அனுமதியின்றி விடுப்பு எடுக்கவோ, விடுமுறை நாட்களில் தலைமை இடத்தை விட்டுச் செல்வதோ கூடாது. கோட்ட, வட்ட மற்றும் வட்டார அளவல் பேரிடர் தடுப்பு மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள், ஆர்.டி.ஓ., தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியிலுள்ள தாழ்வான பகுதிகளை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஒன்றியங்களிலும் குழுக்கூட்டம நடைபெறும் போது, இதுகுறித்து விவாதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி, ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டு, தகவல் பரிமாற்றத்துக்கான அனைத்து வசதிகளும் செய்ய வேண்டும். சார்நிலை அலுவலர்கள் கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைள், நிவாரணம் உடனுக்குடன் வழங்கிட தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். புயல், பாதுகாப்பு மையங்கள் மற்றும் பொது இடங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை பார்வையிட வேண்டும். பழைய மழைமானியை மாற்ற வேண்டும். அரசு தானியங்கி பணிமனை, போக்குவரத்துத்துறை, தீயணைப்புத்துறையினர் தயாராக இருக்க வேண்டும். சுற்றுலாத்துறையிடமிருந்து படகுகளை கேட்டுப் பெற வேண்டும். வட்டார அளவில் மக்களுக்கு செயல்முறை விளங்கம் செய்து காட்ட வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகங்களில் தேவையான அளவு மருந்து, தடுப்பூசி கையிருப்பில் வைத்திருக்க உரிய நடவடிக்கைளை சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால உதவி மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பு அலுவலராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செயல்படுவார். மழை, வெள்ளம் பற்றிய தகவல் மற்றும் பாதிப்பு பற்றி 0431-2461178 என்ற ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., மாணிக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், பாரதிதாசன் பல்கலை தொலையுணர்வு மைய துறைத்தலைவர் குமணன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us