Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கூடங்குளம் பகுதி மக்களை காப்பாற்றுங்கள்: பிரதமரிடம் போராட்டக் குழுவினர் மனு

கூடங்குளம் பகுதி மக்களை காப்பாற்றுங்கள்: பிரதமரிடம் போராட்டக் குழுவினர் மனு

கூடங்குளம் பகுதி மக்களை காப்பாற்றுங்கள்: பிரதமரிடம் போராட்டக் குழுவினர் மனு

கூடங்குளம் பகுதி மக்களை காப்பாற்றுங்கள்: பிரதமரிடம் போராட்டக் குழுவினர் மனு

ADDED : அக் 08, 2011 10:56 PM


Google News
Latest Tamil News
'கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதில், அந்தப் பகுதி மக்களாகிய எங்களுக்கு ஒப்புதல் இல்லை. எனவே, அணுமின் நிலையத்தை நிரந்தரமாக கை விடும் முடிவை எடுத்து, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும்படி வேண்டுகிறோம்' என, போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரதமரை சந்தித்தபோது, உதயகுமாரன் தலைமையிலான போராட்டக் குழுவினர் சார்பில் அளிக்கப்பட்ட மூன்று பக்க மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மேற்குவங்கம் ஹரிபூரில், அணுமின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்ட போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் அணுமின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டபோது, அங்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு திட்டங்களை துவங்க முடியவில்லை.

ஆனால், தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு, பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மிகவும் முக்கியமானது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகள்தான். அவை முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தை சுனாமி தாக்கியது. அப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்கள் பலவற்றுக்கும் பூகம்ப அபாயம் உள்ளது. கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில், 2006 மார்ச்சில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி, ஏழு தென்மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தவிர, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ரஷ்யாவின் உதவியோடு நிறுவப்பட்டுள்ள, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தப் பகுதியில் தோரியம் போன்ற கனிம தாதுக்கள் இருப்பதால், அவற்றை பலரும் வெட்டி எடுக்கின்றனர். இதனால், அந்தப் பகுதி மக்களுக்கு புற்றுநோய், மனநிலை பாதிப்பு, குறைப்பிரசவம் என, பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற பாதிப்புகளால் ஏற்கனவே கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மேலும் பயம் வருகிறது. இந்த திட்டம் மூலம் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மீன்வளம் நிச்சயம் அழியும் அபாயமும் உள்ளது.

மன்னார் வளைகுடா, மேற்குதொடர்ச்சி மலை என, இயற்கை சூழல்களும், கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட நிறைய சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாக இருக்கும் இங்கு, அணுமின் நிலையம் அமைவதற்கு இந்தப் பகுதி மக்களாகிய எங்களுக்கு ஒப்புதல் இல்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக கைவிடும் முடிவை எடுத்து, இப்பகுதி மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும்படி வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நமது டில்லி நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us