Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூரில் ஆக., 2, 3, 4ல் வேலை நிறுத்தம் :தொழில் பாதுகாப்பு குழு அறிவிப்பு

திருப்பூரில் ஆக., 2, 3, 4ல் வேலை நிறுத்தம் :தொழில் பாதுகாப்பு குழு அறிவிப்பு

திருப்பூரில் ஆக., 2, 3, 4ல் வேலை நிறுத்தம் :தொழில் பாதுகாப்பு குழு அறிவிப்பு

திருப்பூரில் ஆக., 2, 3, 4ல் வேலை நிறுத்தம் :தொழில் பாதுகாப்பு குழு அறிவிப்பு

ADDED : ஜூலை 25, 2011 10:57 PM


Google News

திருப்பூர் : சாயப்பட்டறை பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, தொழில் பாதுகாப்பு குழு சார்பில், ஆகஸ்ட் 2,3,4 ஆகிய மூன்று நாள் தொடர் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (27ம் தேதி) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு நீரை அகற்றாத சாய ஆலைகளை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூரில் உள்ள சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்களை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மூடினர். பனியன் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள சாய, சலவை ஆலைகள் கடந்த ஆறு மாதமாக மூடப்பட்டுள்ளதால், பனியன் தொழில் முடங்கியுள்ளதோடு, தொழிலாளர்கள் மற்றும் சார்ந்துள்ள அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக, ஆகஸ்ட் 2,3,4 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது: தொழில் பாதுகாப்பு குழு மற்றும் அனைத்து தொழில் அமைப்புகள் கடந்த வாரம் கூடி ஆலோசனை செய்தது. அப்போது, சாய ஆலைகளை உடனே திறந்து திருப்பூரை காப்பாற்றக்கோரி, நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்கள், வணிகர்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், வரும் ஆக., 2, 3,4 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும், என்றார். இந்து முன்னணி ஆதரவு: இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'சாய ஆலைகளை திறக்கக்கோரி தொழில் பாதுகாப்பு குழு ஆக., 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் நடத்தும் வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பு போராட்டத்துக்கும், அரசியல் கட்சிகள் சார்பில் ஆக., 4ம் தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கும் இந்து முன்னணி ஆதரவு தெரிவிக்கிறது,' என்று கூறியுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டம்: சாய ஆலை பிரச்னை தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திருப்பூரில் ஆக., 4ம் தேதி காலை 6.00 மணி முதல், 5ம் தேதி காலை 6.00 மணி வரை, 24 மணி நேர பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் காமராஜ் கூறுகையில், ''தொழில் பாதிப்பால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். உள்ளூர் மக்களும் வேலை இழந்துள்ளனர். வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளில் கூட வியாபாரமில்லை. இதே நிலை தொடர்ந்தால், திருப்பூரின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார். கூட்டத்தில், மா.கம்யூ., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., - சமத்துவ மக்கள் கட்சி - மனிதநேய மக்கள் கட்சி - பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us