பயறு வகைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை : நிதியமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
பயறு வகைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை : நிதியமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
பயறு வகைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை : நிதியமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

சென்னை : ''நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வது போல, பயறு வகைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் சீரமைக்கப்பட்டன. ஆனால், 2006ல் பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, பல துறைகளிலும் சீர்கேடுகளை ஏற்படுத்தியதால், தமிழகம் இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போதைய அரசு, தி.மு.க., அரசு 2010-11ம் ஆண்டுக்கு, 3,128 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை மீண்டும் ஏற்படுத்திச் சென்றுள்ளதை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள 49 பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஒன்பது வாரியங்களின் ஒட்டுமொத்த நஷ்டம், 2005-06ம் ஆண்டு வரை 8,023 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு பிறகு வந்த தி.மு.க., அரசு ஐந்தாண்டுகளில், தங்களது நிர்வாகத் திறமையின்மையால், 32 ஆயிரத்து 273 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. மின் வாரியமும், போக்குவரத்துக் கழகங்களும் மிகுந்த கடன் சுமையால் முடங்கிவிடும் அபாய நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த நிலையிலும், ஓரளவு நிதி ஆதாரங்களைத் திரட்டி, ஏற்கனவே ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை முழுமையாக நீக்கி, 8,900 கோடி ரூபாய்க்கான புதிய திட்டங்களையும் மக்களுக்கு வழங்கி, மிகக் கவனமாக இந்த பட்ஜெட்டை, முதல்வர் தயாரித்துள்ளார்.
விவசாய விளைபொருட்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றி, இடதுசாரிகள் குறிப்பிட்டனர். விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பதில் இந்த அரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ஒருபுறம் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம், நுகர்வோரை பாதிக்காத வகையில், விலைவாசியையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலையை, இந்த அரசு வழங்கும். தற்போது சன்ன ரக நெல்லுக்கு, குவிண்டாலுக்கு 1,110 ரூபாயும், சாதாரண நெல்லுக்கு 1,080 ரூபாயும் வழங்கப்படுகிறது. கரும்புக்கு டன்னுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பயறு வகைகளுக்கும், மத்திய அரசு நிர்ணயித்தபடி, பச்சைப் பயறுக்கு குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், உளுந்தம் பயறுக்கு 3,300 ரூபாயும், துவரைக்கு 3,200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வது போல, இந்த அடிப்படை ஆதார விலையில் பயறு வகைப் பொருட்களையும் கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்ய, இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு நிதியமைச்சர் தெரிவித்தார்.


