/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசியல் மோதலில் ஆஞ்சநேயர் பக்தர்கள் "அப்செட்'அரசியல் மோதலில் ஆஞ்சநேயர் பக்தர்கள் "அப்செட்'
அரசியல் மோதலில் ஆஞ்சநேயர் பக்தர்கள் "அப்செட்'
அரசியல் மோதலில் ஆஞ்சநேயர் பக்தர்கள் "அப்செட்'
அரசியல் மோதலில் ஆஞ்சநேயர் பக்தர்கள் "அப்செட்'
ADDED : அக் 10, 2011 10:25 PM
துடியலூர் : துடியலூர் அருகே ஆஞ்சநேயருக்கு போடப்பட்ட பணமாலை, ஐ.ஓ.பி., வங்கியில் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது.துடியலூர் அருகே தொப்பம்பட்டி ஜெங்கமநாயக்கன்பாளையத்தில் நவாம்ச ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி கடந்த 15ம் தேதி ஆஞ்சநேயருக்கு தன அலங்காரம் நடந்தது. மூன்றே கால் லட்ச ரூபாய் பணத்தில் ஆஞ்சநேயருக்கு பண மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் மணி, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.இது குறித்து உள்ளாட்சி தேர்தலில் குருடம்பாளையம் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் புகார் எழுப்பினார். தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்ய ஆஞ்சநேயருக்கு பண அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் கிளப்பினார். துடியலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. துடியலூர் எஸ்.ஐ., சரவணன், ஆஞ்சநேயருக்கு அலங்காரமாக செய்யப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தினார்.அங்கிருந்த ஆஞ்சநேயர் பக்தர்கள், 'தங்களிடம் உள்ள பணத்தை அலங்காரத்துக்கு கொடுத்து உதவியதாக' தெரிவித்தனர். ஆனால் போலீசார், 'தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல் சந்தேகத்தை எழுப்புவதால், அலங்கார பணம் மூன்றே கால் லட்ச ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும், தேர்தல் முடிந்தவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். அதன்படி, ஆஞ்சநேயர் அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பணம் ஐ.ஓ.பி., வங்கியில் கோவில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜ் பெயரில் ஒரு மாதம் டிபாசிட் செய்யப்பட்டது. டிபாசிட்டுக்கான ஒரிஜினல் ரசீது, ஆஞ்சநேயர் அலங்காரத்துக்கு பணம் கொடுத்து உதவிய நபர்களின் பெயர் பட்டியல் ஆகியவை துடியலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இப்பிரச்னைக்கு காரணமான வேட்பாளர் மாணிக்கத்திடம் பக்தர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களிடையே ஏற்பட்ட போட்டி, ஆஞ்சநேயரையும் விட்டு வைக்கவில்லையே' என, பக்தர்கள் புலம்பினர்.


