"ஆத்தா ஆடு கொடுத்தாக, ஒரு மாடு கொடுத்தா தேவல':ஏக்கப் பெருமூச்சு விடும் கிராம பெண்கள்!
"ஆத்தா ஆடு கொடுத்தாக, ஒரு மாடு கொடுத்தா தேவல':ஏக்கப் பெருமூச்சு விடும் கிராம பெண்கள்!
"ஆத்தா ஆடு கொடுத்தாக, ஒரு மாடு கொடுத்தா தேவல':ஏக்கப் பெருமூச்சு விடும் கிராம பெண்கள்!
ADDED : அக் 09, 2011 11:38 PM
'ஆத்தா (ஜெயலலிதா) ஆடு கொடுத்தாக... ஒரு மாடு கொடுத்தா தேவல... பஞ்சம் பிழைச்சுப்போம்,' என, அரசு வழங்கிய இலவச ஆடுகளை வளர்க்கும் ஏழை பெண்கள் ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனர்.கிராம ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, 'இலவச வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் வழங்கும்' திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, மாநில அளவில் ஏழு லட்சம் நிலமற்ற ஏழை பெண்களுக்கு, ஒரு பயனாளிக்கு ஒரு கிடா மற்றும் மூன்று பெட்டை ஆடுகள் இலவசமாக படிப்படியாக வழங்கப்படவுள்ளது.
அடையாள வில்லை: ஆடு ஒன்றுக்கு ரூ.2,500 என, நான்கு ஆடுகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும். நோயற்ற ஆடுகளை வழங்குவதற்காக, கால்நடைத்துறை மருத்துவ குழுவினர் ஆட்டுச் சந்தைக்கு செல்கின்றனர். அங்கு, விலை பேசி வாங்கப்படும் ஆறு மாத குட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். பின், தேர்வு செய்யப்படும் ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்குகின்றனர். அரசு சார்பில் வழங்கப்படும் இலவச ஆடுகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஆட்டின் இடது காதில் இளம் பச்சை நிறத்திலான அடையாள வில்லையை மாட்டி விடுகின்றனர்.பயனாளிகள் தேர்வு: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆடுகள் வழங்கப்படுகிறது. ஆடுகளை இரண்டு ஆண்டு வளர்க்க வேண்டும். பின், இனப் பெருக்க அடிப்படையில் சுமார் 12 முதல் 16 கிலோ எடையுள்ள ஆடுகளை விற்று லாபத்தை எடுத்து கொள்ளலாம். அரசின் முதலீட்டை முறையாக பயன்படுத்தி, வாழ்க்கை தரத்தை பெண்கள் முன்னேற்றி கொள்ள வேண்டும், என்பதே திட்டத்தின் நோக்கம்.
ஆடும், மாடும் தேவை: ஆடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது. வேறு தொழிலில் ஈடுபடக்கூடாது. வீட்டு கொட்டகையில் ஆடுகளை பராமரிக்க ஒருவர் இருக்க வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்களும் உண்டு. ஆடு வளர்ப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தான் வருவாய் வரத் துவங்கும். இடைப்பட்ட காலத்தில் வேலைக்கு செல்லாமல், ஆடுகளை மட்டுமே வளர்த்து வந்தால், வருமானத்திற்கு எங்கே போவது? என பயனாளிகள் கேட்கின்றனர். அதற்காக ஆட்டுடன், கறவை மாடு ஒன்றையும் வழங்க வேண்டும், என்கின்றனர்.
பயனாளியின் ஏக்கம்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசப்பன்பட்டியை சேர்ந்த பயனாளி சுமதி, 34, கூறும்போது, ''கணவர் இறந்து விட்டார். சொந்த நிலம் இல்லை. மூன்று மகன்கள் உள்ளனர். ஆத்தா (ஜெயலலிதா) ஆடு கொடுத்தாக... ஒரு மாடு கொடுத்தா தேவல... பஞ்சம் பொழச்சுப்போம்,'' என்றார்.
பயனாளி அரியநாச்சி, 55, கூறும்போது, ''கணவரால் கைவிடப்பட்ட எனக்கு மகன் உள்ளார். கூலிகூலி வேலைக்கு சென்றால் தினமும் ரூ.50 கிடைக்கும். ஆடு வளர்ப்பு நல்ல திட்டம். ஆனாலும், ஆட்டுடன் ஒரு கறவை மாட்டையும் கொடுத்தால், பொருளாதாரம் முன்னேறும்,'' என்றார்.
இத்திட்டப்படி சொற்ப அளவிலேயே பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். நிபந்தனைகளை தளர்த்தி, தேர்வு செய்யப்படும் பயனாளிகள் அனைவருக்கும் குறுகிய காலத்திற்குள் ஆடுகளுடன் கறவை மாடு ஒன்றையும் வழங்கினால், பயனுள்ள திட்டமாக இருக்கும். பால்உற்பத்தி பெருகும்.நமது சிறப்பு நிருபர்


