Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவும் பாடியநல்லூர் ஏரி சீரமைக்கப்படுமா?

நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவும் பாடியநல்லூர் ஏரி சீரமைக்கப்படுமா?

நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவும் பாடியநல்லூர் ஏரி சீரமைக்கப்படுமா?

நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவும் பாடியநல்லூர் ஏரி சீரமைக்கப்படுமா?

ADDED : அக் 09, 2011 12:24 AM


Google News

நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவும் பாடியநல்லூர் ஏரியை, தூர் வாரி, கரைகளை சீரமைத்து, படகுத்துறையுடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை, செங்குன்றம் அருகே, பாடியநல்லூர் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது பாடியநல்லூர் ஏரி. 167 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாடியநல்லூர் ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் ஒரு பகுதி குப்பை மேடாகவும், மற்ற பகுதி கழிவுநீர் குட்டையாகவும் மாறி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் சீர்கேட்டில் சிக்கி உள்ள இந்த ஏரி, போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஏரியைச் சுற்றி பாடியநல்லூர், பன்னீர்வாக்கம், சிறுணியம், ஜோதிநகர், பவானி நகர், தீர்த்தகரையம்பட்டு, கன்னம்பாளையம் என பல கிராமங்கள் உள்ளன.



மழைக்காலங்களில், சோழவரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து, ஏரிக்குள் வந்து சேரும் உபரிநீர் பாதுகாக்கப்படுவதில்லை. தங்களின் சுய லாபத்திற்காக ஏரியின் கரைகளை, விஷமிகள் சிலர், உடைத்து சேதப்படுத்தி இருந்த இடம் தெரியாமல் ஆக்கி உள்ளனர். இதனால், ஏரிக்குள் கிடைக்கும் மொத்த நீரும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக சேமிக்க முடியாத நிலையில், மற்ற பகுதிகள் வழியாக வெளியேறி, மேற்கண்ட கிராமங்களையும், அங்கு நடக்கும் விவசாயத்தையும் ஆண்டுதோறும் பாதிக்கிறது. பொதுப்பணித் துறை நிர்வாகம், ஏரியை தூர் வாரி ஆழப்படுத்தி, கரைகளை உறுதியாக்க வேண்டும். அதன் மூலம் மழை வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் நிலை உருவாகும். உரிய திட்டமிடல் இருந்தால், இந்த ஏரியை சீரமைத்து படகுத்துறையுடன் கூடிய சுற்றுலாத்தலமாக்கலாம். வளர்ச்சி அடைந்து வரும் பாடியநல்லூர், செங்குன்றம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் தேவையும், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நாள் முழுக்க நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைகளை தீர்க்க ஏரியின் 167 ஏக்கரில், 10 முதல் 15 ஏக்கர் நிலத்தை, பொதுப்பணித் துறையிடம் இருந்து முறையாக பெற்று, 400 கிலோவாட் அளவிற்கான துணை மின் நிலையம், ஆட்டோ நகர், லாரி வளாகம், பூங்கா மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை அமைக்கலாம். இதன் மூலம், எதிர்காலத்தில் தனியாரின் ஆக்கிரமிப்புகளில் இருந்து, ஏரி பாதுகாக்கப்படுவதுடன், சுற்று வட்டாரப் பகுதிகளில் தொழில், வர்த்தகமும் பெருகும். ஏரி உள்ளிட்ட நீர், நிலைகளை மேம்படுத்தும் தமிழக அரசின் திட்டத்தில் பாடியநல்லூர் ஏரி, சீரமைக்கப்பட வேண்டுமென பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.



-அ. ஜமால்மொய்தீன்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us