குறிச்சி : நிர்வாகம் செயல்படுமா என, கோவை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கத் துவங்கி உள்ளனர்.கோவை மாவட்டத்தில், ஆர்.எஸ்.புரம்., சிங்காநல்லூர், குறிச்சி, சுந்தராபுரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி என, எட்டு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது.
விற்பனைக்குழு நிதி பொறுப்பை வகிக்கிறது. இக்குழுவே, உழவர் சந்தைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. அடையாள அட்டை பெற்றவர்கள், விளைபொருட்களை அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், அதிகாலை 4.00 முதல் 7.00 மணி வரை கொண்டு வரலாம். இதற்கு கட்டணம் கிடையாது. விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை விற்பதால், லாபமடைந்தனர். பொதுமக்களுக்கு மிகுந்த பயனளித்து வரும், உழவர் சந்தைகளின் எதிர்காலம், தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 1996-2001 தி.மு.க., ஆட்சியின்போது துவக்கப்பட்ட இச்சந்தைகள், தொடர்ந்து வந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது கண்டுகொள்ளப்படவில்லை. அதன் முதற்கட்டமாக, இலவசமாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன; ஆய்வுக்கூட்டங்களில், இச்சந்தை குறித்து எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சந்தைகள் புத்துயிர் பெற்றன.இதன் தொடர்ச்சியாக, மாவட்டம்தோறும் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க, உழவர் சந்தை அலுவலர்கள் சென்றனர். கூட்டம் முடியும் வரை, வெளியிலேயே காத்திருந்து திரும்பினர். தற்போது, இக்கூட்டத்தில் பங்கேற்க அலுவலர்கள் வரவேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த முறை போல, பஸ் பயண அனுமதி நிறுத்தப்படவில்லை.விவசாயிகளிடம் உள்ள அடையாள அட்டையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் உள்ளது. இந்த அடையாள அட்டை மாற்றப்படுமா, உழவர் சந்தையின் பெயர் மாறுமா அல்லது உழவர் சந்தை நிர்வாகமே கலைக்கப்படுமா என்பதே, இந்நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் இத்திட்டத்தை கைவிட்டால், மக்களிடையே அதிருப்தி ஏற்படும் சூழல் உருவாகும்.