ADDED : ஆக 02, 2011 01:21 AM
ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 13ம் தேதி வேலை நாளாக செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான 3ம் தேதி அன்று, அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.
சிறப்பு பஸ்கள் இயக்கம்: தீரன்சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் இருந்து ஓடாநிலைக்கு, நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஈரோடு - அறச்சலூர் - ஓடாநிலை, கொடுமுடி - அறச்சலூர் (தடம் எண் கே 10), ஈரோடு - நத்தக்காடையூர் - பழையகோட்டை (தடம் எண் 14), ஈரோடு - அறச்சலூர் (தடம் எண் 33), ஈரோடு - அறச்சலூர் - காங்கேயம் - பழனி தடத்தில் இயங்கும் அனைத்து புறநகர் பஸ்கள், சிறப்பு பஸ்களாக இயக்கப்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


