உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, கட்சிகள், உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் இறங்கி உள்ளன.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வும் தே.மு.தி.க., வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றி பெற்றனர். தே.மு.தி.க., முதல் முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவையும், அவரது அரசையும் விஜயகாந்தோ, அவர் கட்சியினரோ விமர்சனம் செய்வதை தவிர்த்து வந்தனர்.அ.தி.மு.க., அரசின், 100 நாள் ஆட்சி குறித்த கேள்விகளுக்கு கூட பதில் அளிக்காமல் விஜயகாந்த் பொறுமை காத்து வந்தார். இந்த பொறுமைக்கு காரணம் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட உள்ள கோவில் அறங்காவலர் குழு பதவி, வணிகர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நலவாரியங்களில் பதவிகளை, தே.மு.தி.க.,வினருக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் பேசிய போதெல்லாம், குறிப்பாக அரசையோ, அரசுத்துறை அதிகாரிகளையோ குற்றம் சாட்டி பேசும் போதெல்லாம் குறுக்கிட்டு பேசிய முதல்வர், அவர்களின் கேள்விகளுக்கு காரசாரமான பதிலையே அளித்தார்.
உறுப்பினர்களின் நியாயமான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அரசை கண்டித்து, தே.மு.தி.க.,வினர் குரல் எழுப்பவில்லை. காரணம் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியை தொடர வேண்டும் என கருதியது.ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கும் முன்பே, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது.கூட்டணி மாறிய போதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆளும் கட்சியை விமர்சனம் செய்யாமல் மவுனம் காத்து வருகிறார்.தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38 ஆயிரத்து, 421 கோவில்களின் அறங்காவலர்கள் குழு பதவிகள், வணிகர் நல வாரியம் உட்பட அரசின், 32 வாரியங்களுக்கு உறுப்பினர், தலைவர் நியமனம் உட்பட நியமன பதவிகளுக்கான நபர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த பதவிக்கான நியமன அறிவிப்பு அனைத்தும் தேர்தல் முடியும் நிலையில் வெளியாக உள்ளது.உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் வரை, தே.மு.தி.க.,வினர் இந்த பதவிகளை நாமும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், தேர்தலில் கூட்டணி மாற்றத்தை மவுனமாக சாதித்த, அ.தி.மு.க., நியமன பதவிகளை தங்களுக்கு வழங்காது என்பது தற்போது, தே.மு.தி.க.,வினர் மத்தியில் செய்தி பரவி உள்ளது, அக்கட்சி தெண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியிலோ உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு பின் அரசால் நியமனம் செய்யப்பட உள்ள பதவிகள் அனைத்தும் தங்கள் கட்சிக்கே கிடைக்கும் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் தங்களுக்கு யோகம் அடிக்க உள்ளதாக மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, அரசின் நியமன பதவிகள் காத்து இருப்பதாக, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொண்டர்களிடம் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். இது உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றி வரும், அ.தி.மு.க.,வினரை உற்சாக மடையச் செய்துள்ளது.காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகளின் நிலையை வேறுமாதிரியாக உள்ளது. தேர்தலுக்குப் பின்னர் இந்த கட்சிகளின் உண்மையான பலம் தெரிந்து விடும். அப்போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள கட்சி நிர்வாகிளின் பதவிக்கே மேலிடத்தால் ஆபத்து வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், அந்த கட்சி நிர்வாகிகளும் பயந்து போய் உள்ளனர்.
- நமது சிறப்புநிருபர் -


