PUBLISHED ON : மார் 01, 2026

ஈரோடு கோபிசெட்டிபாளையம், பி.கே.ஆர்., மகளிர் கலைக்கல்லுாரி மாணவியரான இவர்கள், 'என் தலைவன்' எனச் சொல்வது சினிமா நடிகரையோ, அரசியல் தலைவரையோ அல்ல; இவர்கள் வழி வேறு!
'எதற்காகவும் மாறாத உன் இயல்பு உன் மதிப்பை உயர்த்தும்' எனச் சொல்லும் அங்குர் வாரிகூ; 'எழுத்தாளர், இணைய தொழில் முனைவோர்' அடையாளத்துடன் சாதிக்கும் இவரை, சமூக ஊடகங்களில் பின்பற்றும் 15 மில்லியன் நபர்களில் நானும் ஒருத்தி. 'பெருங்கனவு காணத் துணியுங்கள்' எனும் இவரது புத்தகம் என் வழிகாட்டி மற்றும் நல்லாசிரியர்!'
ரா.சிநேகா, எம்.ஏ., தமிழ்
'பாகிஸ்தானின் இரும்பு பெண்மணி முனிபா மஸோரி; 'குழந்தைப் பேறின்மை, மணமுறிவு, விபத்தில் உறுப்புகள் செயலிழப்பு' எனச் சூழ்ந்த தடைகளை தகர்த்து, ' சக்கர நாற்காலியில் இயங்கும் 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், வழக்கறிஞர், நல்லெண்ண துாதர், மாடல்' என ஜொலிக்கும் இவரே என் உதாரண மனுஷி!'
ரா.தர்ஷினி, பி.பி.ஏ.,
'தன்னுடலில் பூரித்த பெண்மையை மறைக்காது, 'இதுவே என் நிஜம்' என
வெளிப்படுத்திய நாளில் அத்தனை உறவுகளையும் இழந்த என் பள்ளித் தோழன்;
தற்போது, தன் வலிகளை உதறி நன்கு படித்து, திருப்பூர் மருத்துவ கல்லுாரி
மாணவியாகி நிற்கிறாள்; 'எதற்கும் கண்ணீர் தீர்வாகாது' என வாழ்ந்து காட்டும்
இத்தோழி யாழினியே என் வழிகாட்டி!'
ரா.கஸ்துாரி, பி.காம்.,





