Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ பயணத்துக்குப்பின் உடனே பூனையை குளிப்பாட்டலாமா?

பயணத்துக்குப்பின் உடனே பூனையை குளிப்பாட்டலாமா?

பயணத்துக்குப்பின் உடனே பூனையை குளிப்பாட்டலாமா?

பயணத்துக்குப்பின் உடனே பூனையை குளிப்பாட்டலாமா?

ADDED : அக் 18, 2025 09:20 AM


Google News
Latest Tamil News
கோவை, 'சேயோன் பெட்ஸ்' உரிமையாளர் திவ்யபிரகாஷ், பொறியியல் பட்டதாரி. இவர், பெர்ஷியன் இன பூனைகளின் ப்ரீடரும் கூட. பூனைகளுடன் பயணம் செய்யும் போது, என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்பது குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

பூனை மிக சென்சிட்டிவ். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லும் போது, அதன் உடல், மன ஆரோக்கியத்திற்கு, அதிக முக்கியத்துவம் தர வேண்டும். சோர்வாக இருக்கும் போதும், உடல்நிலை சரியில்லாத சமயங்களிலும் பயணப்பட கூடாது. பஸ்சில் பயணிப்பதாக இருந்தால், காற்று உள்ளே செல்லும் வகையில் மூடப்பட்ட பெட்டியில் பூனையை வைத்து கொண்டு செல்லலாம். ஏனெனில், அதிகப்படியான இரைச்சல், பூனைக்கு அசவுகர்யம் ஏற்படுத்தும்.

ரயிலில் முதல் ஏசி., வகுப்பில் மட்டுமே பூனையை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இங்கு அவ்வளவாக இரைச்சல் இருக்காது. வெளியில் வேடிக்கை காட்டலாம். காரில் பூனையை கொண்டு செல்லும் போது எங்கேயாவது நிறுத்தினால் பூனையை தனியே காருக்குள் விட்டு செல்லக்கூடாது. அச்சமயத்தில் காருக்குள் அதிக வெப்பம் ஏற்படும். புது இடத்தில் தனிமையில் இருக்க பயப்படும்.

வெளியூர் பயணங்களுக்கு பூனையை பழக்கும் முன், வீட்டை சுற்றி சில கிலோமீட்டர் துாரம் அவ்வப்போது பயணம் செய்ய வேண்டும். பிறகு நீண்டதுாரம் கொண்டு செல்லும் போது அவை விரும்பி பயணிப்பதை காணலாம். பூனைக்கு, மருத்துவர்கள் கூறும் உரிய கால இடைவெளியில், தடுப்பூசி போடுவது, குடற்புழு நீக்கம் செய்வது அவசியம். இது, புதிய இடத்தில் ஏதேனும் வைரஸ், பாக்டீரியா தொற்று கிருமிகள் தாக்கினாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

பயணத்திற்கு பின், பூனையை உடனே குளிப்பாட்டினால், அடுத்த 10 மணி நேரத்திற்குள் காய்ச்சல், பேதி ஏற்படலாம். எனவே, பயண அலுப்புக்கு பின், அவை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே குளிப்பாட்ட வேண்டும். வெயில் காலங்களில் பயணிக்கும் போது, 'ஓ.ஆர்.எஸ்.,' பவுடர் கலந்த தண்ணீர், சுத்தமான தண்ணீர் அடிக்கடி கொடுப்பதன் மூலம், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ளலாம்.

பயணத்திற்கு பின், பூனை சோர்வாக இருக்கலாம். ஆனால், சாப்பிடாமல் இருந்தால் மட்டும், உடனே கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். பூனையின் குணாதிசயம் மற்ற விலங்குகளை ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமாக இருக்கும். அது விரும்புவதை மட்டுமே செய்யும். அதன் சுதந்திரத்தில் யாரையும் தலையிட அனுமதிக்காது. அதை அடிக்கடி தொந்தரவு செய்ய கூடாது. சில பூனைகள் பயணத்தை விரும்பாது. அவற்றை கட்டாயப்படுத்தி, எங்கும் எடுத்து செல்லக்கூடாது. மீறினால் அவை, அக்ரசிவ்வாக மாறிவிடும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us