Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ பயிரை மேய்கிறது வேலி...ரெண்டு பக்கமும் வாங்கறது போலீசின் 'ஜோலி'

பயிரை மேய்கிறது வேலி...ரெண்டு பக்கமும் வாங்கறது போலீசின் 'ஜோலி'

பயிரை மேய்கிறது வேலி...ரெண்டு பக்கமும் வாங்கறது போலீசின் 'ஜோலி'

பயிரை மேய்கிறது வேலி...ரெண்டு பக்கமும் வாங்கறது போலீசின் 'ஜோலி'

ADDED : ஜூலை 16, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
பயிரை மேய்கிறது வேலி...ரெண்டு பக்கமும் வாங்கறது போலீசின் 'ஜோலி'

சமீபத்தில் வெளியான சினிமாவை பார்க்க தியேட்டருக்கு சென்றனர் சித்ராவும், மித்ராவும். ''ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டருக்கு வந்திருக்கோம். படம் எப்படியிருக்குன்னு பார்க்கலாம். இன்னும் டைம் இருக்கு அக்கா. கேன்டீன் போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாமா,'' என்றாள் மித்ரா.

''ஓகே'' என்ற சித்ராவை பின் தொடர்ந்தாள் மித்ரா.

''ம்ம்ம்... எத்தனை வந்தாலும், லஞ்சம், ஊழலையெல்லாம் ஒழிக்கவே முடியாது போல... எல்லாத்துறையிலும் புற்று நோய் போல பரவிக்கிடக்குது...'' என வேதனைப்பட்ட மித்ரா, ''திருப்பூர் கார்ப்பரேஷன் லிமிட்ல, அப்பப்போ குடிநீர் குழாய் பல பக்கம் உடைஞ்சு போகுதுல்ல. அந்த 'லீக்கேஜ்' அடைக்கிற வேலையை 'டெண்டர்' விடுவாங்களாம்,''

''கார்ப்பரேஷன்ல குடிநீர் குழாய் பராமரிப்பு வேலை செய்றவங்களே, வெளியாள் பேர்ல 'டெண்டர்' எடுத்து 'லீக்கேஜ்' சரி பண்ற வேலை செய்றாங்களாம். கூடுதலா 'பில்' போட்டு, பணம் வாங்கிக்கிறாங்கன்னும் பேசிக்கிறாங்க. இது, ஆபீசர்களுக்கு தெரியுமா, தெரியாதான்னு தெரியல,'' என்றாள் மித்ரா.

''இது, கவுன்சிலர்களுக்கு கூடவா தெரியாது...'' என கேள்வியெழுப்பிய சித்ரா, ''மித்து, பூண்டி முனிசிபாலிட்டி நாராயணசாமி நகர்ல பாலம் கட்றப்போ, குடிநீர் குழாயை தெரியாம உடைச்சிட்டாங்களாம். அங்க இருக்கற மக்கள், அதிகாரிங்ககிட்ட புகார் சொல்ல, சரிபண்ணிட்டாங்களாம்,''

''அந்த வார்டு தோழர் கட்சி பெண் கவுன்சிலரும், அவரோட வீட்டுக்காரரும் இப்போ அமெரிக்காவுல இருக்காங்களாம். வார்டு வேலைகளை கவனிக் கிறதுக்காக பி.ஏ., மாதிரி ஒருத்தரை வச்சிருக்காங்களாம். கவுன்சிலரோட வீட்டுக்காரரு, புகார் கொடுத்தவங்களை 'போன்'ல கூப்பிட்டு, 'வார்டுக்குள்ல என்ன பிரச்னைன்னாலும் என்னை கூப்பிட்டு சொல்லுங்க; எதுக்கு பேப்பர்ல 'நியூஸ்' எல்லாம் தர்றீங்க'ன்னு கேட்டிருக்காரு,''

''பொதுமக்கள் பிரச்னை தானே பேப்பர்ல வந்திருக்கு'ன்னு, மக்கள் சொல்லியிருக்காங்க. திடீர்ன்னு பார்த்தா, அடுத்த, 10 நாளா தண்ணியே வரலையாம். 'ஷாக்' ஆன பொது மக்கள், ஆபீசர்கிட்ட புகார் சொன்னதால, மறுபடியும் தண்ணீர் வினியோகத்தை சரி செஞ்சாங்களாம்...'' என்றாள்.

கட்டப்பஞ்சாயத்து 'ஜோர்'


''போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற புகார் தொடர்பான சில 'பஞ்சாயத்து' தெற்கு வி.ஐ.பி.,க்கிட்ட வருமாம். அந்த விவகாரத்தை 'டீல்' பண்ற பொறுப்பை, தன்னோட டிரைவர்கிட்ட ஒப்படைச்சிருக்காராம். அவரு என்னடான்னா, சின்ன சின்னதா இல்லீகல் வேலை செஞ்சு மாட்டிக்கிறவங்களுக்கு சிபாரிசு பண்றது, கட்டப்பஞ்சாயத்து பண்றதுன்னு வசூல் அள்றார்ன்னு சொல்றாங்க,''

''இதனால, தொகுதி வி.ஐ.பி.,க்கு தான் கெட்ட பேரு வருதாம். தீயா வேல பார்க்கணும் 'குமாருங்கற' கதையா, கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை டீல் பண்றதுல்ல ரொம்ப ஆர்வம் காட்றாராம் அந்த டிரைவரு,'' என்றாள் மித்ரா.

''வசூல்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது மித்து. பல்லடத்துல பனியன் தொழில் செய்ற ஒருத்தர் தன்னை ஒருத்தரு, 10 லட்சம் ரூபா ஏமாத்திட்டார்ன்னு, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு புகார் போயிருக்கு...''

''பாதிக்கப்பட்டவங்க புகார் கொடுக்க, ஸ்டேஷன்ல இருக்கற சின்ன ஆபீசர் 'என்கொயரி' பண்ணியிருக்காரு. இதுல ரெண்டு தரப்புக்கிட்டேயும் பஞ்சாயத்து பேசி ரெண்டு தரப்புக்கிட்ட இருந்தும், 'அன்பா' வசூல் பண்ணிட்டாருன்னு பேசிக்கிறாங்க. இப்படியே போனா, போலீஸ் மேல இருக்கற கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போயிடும்...'' ஆவேசமாக பேசினாள் சித்ரா.

இப்படி செய்யலாமா...


''உண்மைதாங்க்கா...'' என்ற மித்ரா, ''அக்கா அதே பல்லடம் போலீஸ் மேட்டரை சொல்றேன் கேளுங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிற வித்தைய பல்லடம் போலீஸ்கிட்ட தான் கத்துக்கணும். போதை பொருள் பறிமுதல் பண்ணா, முழுசா கணக்குல காண்பிக்கிறதே இல்லையாம்,''

''மீதியை போலீஸ்காரங்களே, தங்களோட 'லிங்க்'ல இருக்கற வியாபாரிகளுக்கு 'ரீசேல்' பண்ணிடறாங்களாம். குறிப்பா, 'கிரைம் டீமில்' உள்ள சிலர் குட்கா வியாபாரிங்க கூட 'டைரக்ட் கான்டாக்ட்'ல இருக்காங்களாம். அவங்களோட ஆதரவுல, 'குட்கா' சேல்ஸ் கொடிகட்டி பறக்குதாம்,'' என விஷயத்தை சொன்னாள்.

''வேலியே பயிரை மேய்ற கதையால்ல இருக்கு'' என, சலித்துக் கொண்ட சித்ரா, ''கொஞ்ச நாள் முன்னாடி தாராபுரத்துல பெரிய போலீஸ் ஆபீசர் ஒருத்தரு, நைட் ரவுண்ட்ஸ் போய்க்கிட்டு இருந்தப்போ, கிராவல் மண் ஏத்திட்டு ஒரு வண்டி வந்துச்சாம்,''

''வண்டியை நிறுத்தி டிரைவரை விசாரிக்கிறப்போ, எந்த டாக்குமென்டும் இல்லையாம். ஆனா, வண்டியை விடச் சொல்லி, ஆளுங்கட்சியில இருந்து போலீசுக்கு 'பிரஷர்' கொடுத்திருக்காங்க. அப்புறம் ஏதோ ஒரு டாக்குமென்ட்டை எடுத்துட்டு வந்து காட்டிட்டு, வண்டியை 'ரிலீஸ்' பண்ணிட்டு போயிட்டாங்களாம். ஆனா, அதிகாரிங்க வண்டியை பிடிக்கிறப்போ, டாக்குமென்ட்டை கையோட வைச்சிருக்கணும்ங்றது தான் விதி,'' என நியாயம் சொன்னாள் சித்ரா.

''அக்கா... இப்போ இருக்கற சில அதிகாரிகள்கிட்ட, குறைந்தபட்ச நியாயத்தை எதிர்பார்க்கவே முடியாதுங்க்கா...''

''கவுன்சிலர்களோட தீர்மானத்துக்கே மதிப்பில்லாத போது, வேறென்ன செய்ய முடியும்?'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

மனவேதனை மன்றம்


''எதப்பத்தி சொல்றீங்க்கா...'' காதை கூர்மையாக்கினாள் மித்ரா.

''அவிநாசி, சேவூர் ரோட்ல சிந்தாமணி பஸ் ஸ்டாப் பக்கம் மனமகிழ் மன்றம் திறக்கறதுக்கு ஏற்பாடு பண்ணாங்க. ஆரம்பத்தில் இருந்தே பொதுமக்களும், கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. சில நாள் முன்னாடி நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்துல, வார்டு கவுன்சிலரு, 'என்னோட வார்டுல மனமகிழ் மன்றம் திறக்க கூடாது; வார்டு மக்கள் என் மேல சந்தேகப் படறாங்க'ன்னு சொல்ல, அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவிச்சு, தீர்மானம் நிறைவேத்தினாங்க. இருந்தாலும், மனமகிழ் மன்றத்தை திறந்துட்டாங்க...''

''இதே மாதிரி தான், கொஞ்ச நாள் முன்னாடி, பந்தம்பாளையத்துல மன மகிழ் மன்றம் திறந்தாங்க. சுத்தியிருக்கற மூனு ஊராட்சி மக்களும் எதிர்ப்பை தெரிவிச்சாங்க. ஆர்ப்பாட்டம், முற்றுகைன்னு போராடி, மன்றத்தை மூட வைச்சிட்டாங்க. ஆனா, அவிநாசியில, கவுன்சிலர்களோட தீர்மானத்துக்கே 'பவர்' இல்லாதப்ப, மக்கள் போராடி என்ன பண்றதுன்னு, பலரும் நொந்துக்கிறாங்க...'' என்றாள் சித்ரா.

''அப்போது, அதனை 'மனவேதனை மன்றம்,' என்று தான் சொல்லணும். அக்கா, வாங்க படம் போட்றுவாங்க...'' சொன்ன மித்ராவுடன், விறுவிறு என நடந்தாள் சித்ரா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us