UPDATED : மே 01, 2026 03:43 PM
ADDED : மே 01, 2026 03:30 PM

ஒரு வீட்டின் வலிமை அதன் அடித்தளத்தில்தான் உள்ளது. அந்த அடித்தளம் நன்றாக இருக்க வேண்டுமெனில், அதை தாங்கும் மண் வலிமையாக இருக்க வேண்டும்.
ஆனால் கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, மண்ணின் இயல்பே மாறி விடுகிறது. கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது, மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைகிறது.
நீர் ஆவியாகி வெளியேறுவதால் மண் உலர்ந்து சுருங்குகிறது. இதனால் மண்ணில் பிளவுகள் உருவாகின்றன. மண் சுருங்கும்போது அடித்தளத்துக்கு கீழே காலியான இடங்கள் உருவாகின்றன.
இதனால் வீடு சமமாக அமராது. சில பகுதிகள் கீழே சென்று சில பகுதிகள் உயரமாக இருக்கும். இந்த நிலையை சமமில்லா அமர்வு என்று கூறுகிறோம். இதனால் வீடு சாய்வு மற்றும் சுவர் விரிசல்கள் தோன்றும்.
மண் பிரச்னைகள் ஏற்பட்டால், வீட்டில் சில சின்ன சின்ன மாற்றங்கள் தெரியும். சுவரில் கோணமாக படிக்கட்டு மாதிரி அல்லது நேராக பிளவுகள் தோன்றும். கதவுகள் சரியாக மூடாது, ஜன்னல்கள் சிக்கி திறக்க முடியாத நிலை ஏற்படும். தரை சமமில்லாமல் இருக்கும்.
களிமண் வகை மண்ணில் இந்த பிரச்னைகள் அதிகம். இந்த மண் நனைந்தால் விரியும், உலர்ந்தால் சுருங்கும்.
கருப்பு பருத்தி மண் மற்றும் வண்டல் மண் போன்ற மண்ணும் அதிகம் பாதிக்கப்படும். நீர் ஆவியாகி மண் சுருங்கும்போது, அடித்தளத்தின் கீழ் இடைவெளி உருவாகி, தாங்கும் தன்மை குறைகிறது.
அதன் விளைவாக சமமில்லா அமர்வு மற்றும் விரிசல்கள் தோன்றுகின்றன. இந்த பாதிப்புகள் இருப்பின் உடனடியாக பொறியாளர்களை தொடர்பு கொண்டு தீர்வு காண்பது அவசியம் என்கிறார், 'கொஜினா' செயற்குழு உறுப்பினர் அசோக்குமார்.
