தரம் குறைந்த கட்டுமான பொருட்களால் வரும் பிரச்னைகள் என்ன?
தரம் குறைந்த கட்டுமான பொருட்களால் வரும் பிரச்னைகள் என்ன?
ADDED : ஏப் 11, 2026 07:04 AM

வாடகை வீடுகளில் பல ஆண்டுகளாக கசப்பான அனுபவங்களை பெற்றவர்கள் எப்படியாவது சொந்த வீடு வாங்க மாட்டோமா என்று ஏங்கி தவிக்கின்றனர். இதில் பலரும் பல்வேறு திட்டங்களை பார்த்து திருப்தி அடையாத நிலையில், தனியாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டி குடியேறலாம் என்று நினைக்கின்றனர்.
இவ்வாறு நிலம் வாங்கி அதில் வீடு கட்டுவது என்றால் அதற்கான நிதி தேவையை வங்கிக்கடன் வாயிலாக பூர்த்தி செய்யலாம். ஆனால், தற்போதைய சூழலில், சொந்த வீடு கட்டுவோர் பல்வேறு சவால்களை சந்திப்பதில் சோர்ந்துவிடுகின்றனர்.
புதிய வீடு கட்ட பொறியாளரை தேர்வு செய்வது, அவரிடம் பேச்சு நடத்தி ஒப்பந்தம் போடுவது போன்ற பணிகளுக்கு அப்பால் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணிகள் முறையாக நடக்கிறதா என்று மேலோட்டமாக ஆய்வு செய்தால் போதாது.
அந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு பழக்கமான நிறுவனங்களிடம் இருந்து கட்டுமான பொருட்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதில் வேண்டுமென்றே எந்த பொறியாளரும் தரம் குறைந்த பொருட்களை வாங்குவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் பணிகளை சரியாக முடிக்க வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் மாற்று பொருட்களை வாங்கும் நிலை ஏற்படுகிறது.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சிமென்ட் தொடர்ந்து வாங்கி பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், துாண்கள், மேல்தளம் போன்ற பணியின் போது, தேவையைவிட குறைவான சிமென்ட் மூட்டை மட்டும் சம்பந்தப்பட்ட கடையில் இருக்கும் போது மாற்று பொருளைவாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு கடைக்காரர்கள் மாற்றாக கொடுக்கும் பொருட்கள் தான் பெரும்பாலான இடங்களில் கட்டடத்தின் உறுதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இதில், அவசர நேரத்தில் மாற்று ஏற்பாட்டுக்காக வாங்கும் பொருட்கள் தரம் குறைந்ததாக அமைய வாய்ப்பு அதிகம்.
கட்டுமான பணியில், 80 சதவீதம் சரியான பொருட்களை பயன்படுத்தினாலும், 20 சதவீதம் அளவுக்கு தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தும் போது அது பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும். மிக குறைந்த அளவுக்கு தான் வாங்குகிறோம் என்றாலும், தரம் குறைந்த பொருட்கள் ஒட்டுமொத்த உறுதி தன்மையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதில் கட்டுமான பணியில் எப்போது எந்த நிலையில் என்ன வகை பொருட்கள் தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். இந்த பொருட்களை குறிப்பிட்ட அளவில் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிட்டு செயல்படுங்கள்.
இவ்வாறு கவனமாக இருந்தால், அவசர காலத்தில் மாற்று என்ற அடிப்படையில் தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
கட்டுமான பணியில், 80 சதவீதம் சரியான பொருட்களை பயன்படுத்தினாலும், 20 சதவீதம் அளவுக்கு தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தும் போது அது பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
