காஷ்மீரில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
காஷ்மீரில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
காஷ்மீரில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
ஸ்ரீநகர் : முழு அடைப்பிற்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்ததால், பதட்டத்தை தவிர்க்க, காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்ரீநகரின் சில பகுதிகள் மற்றும் சோபூர், அனந்தநாக், பேஜ்பேரா டவுன் உள்ளிட்ட பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், வணிக வளாகங்கள், கடைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், காஷ்மீரில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீரில் அனைத்து மதத்தினரும், நட்பாகவும், சகோதரர்கள் போலவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அண்மையில், யாரோ ஒருவர் செய்த தவறு, அனைத்து மக்களையும் பாதிக்கிறது. ஊடகங்களும் இதை பெரிது படுத்திவிட்டன. முதல்வர் ஒமர் அப்துல்லா இந்த விவகாரத்தில் தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தியதுடன், சீக்கியர்களுகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்,'' என்றார்.
வெள்ளத்தில் தவிக்கும் தொழிலாளர்கள்: காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, பீகாரைச் சேர்ந்த 250 தொழிலாளர்கள் நடுவழியில் பரிதவித்து வருகின்றனர். அவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர். காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகில், ஷாயூக் என்ற இடத்திலிருந்து தவுலத் பெய்க் என்ற இடத்திற்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில், பீகாரைச் சேர்ந்த 250 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி திடீரென பெய்த பேய் மழை வெள்ளத்தில் சிக்கினர். அங்கிருந்து வெளியில் வர முடியாத அளவிற்கு அந்த பகுதியை இணைக்கும் சாலைகளும், பாலங்களும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், நடுவழியில் அவர்கள் சிக்கி தவிக்கின்றனர். சாப்பிட ஏதும் கிடைக்காமல் கடந்த ஒரு வாரமாக பட்டினியாக உள்ளனர். பல தொழிலாளர்களின் உடல்நிலை மோசமாகியுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தங்களை மீட்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


