Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நலம்/'சாலிசிலிக் அமிலம்' இருக்கும் கிரீம் நன்மை தருமா?

'சாலிசிலிக் அமிலம்' இருக்கும் கிரீம் நன்மை தருமா?

'சாலிசிலிக் அமிலம்' இருக்கும் கிரீம் நன்மை தருமா?

'சாலிசிலிக் அமிலம்' இருக்கும் கிரீம் நன்மை தருமா?

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
தோலுக்கு நிறம் தருவது 'மெலனோசைட்ஸ்' என்கிற நிறமி. இது எந்த இடத்தில் அதிகமாகிறதோ, அங்கு 'பிக்மென்டேஷன்' எனப்படும் இயல்பான தோலின் நிறம் மாறி கருப்பாகி விடும்.

குறிப்பிட்ட இடத்தில் நிறமிகள் அதிகமாவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.

நிறமியை துாண்டுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிக வெயில் நிறமிகளின் உற்பத்தியைத் துாண்டி, தோலை கருக்கச் செய்யும். இதுதவிர, உடலில் ஏற்படும் கோளாறுகள், சுற்றுச்சூழல் காரணிகள், அடிபட்ட காயம் ஆறிய பின், கரும்புள்ளிகள் ஏற்படலாம்.

ஹார்மோன் கோளாறுகளால் நடுத்தர வயதில பல பெண்களுக்கு 'மெலாஸ்மா' எனப்படும் மங்கு வரும்.

சிலருக்கு 'ஆட்டோ இம்யூன்' கோளாறால், முடக்கு வாதம், ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டால் முகத்தில் தோல் நிறம் மாறலாம்.

வெயில் காரணமாக தோல் கருத்தால், 'சன் ஸ்கிரீன்' பயன்படுத்துவது முக்கியம்.நம் தோலைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 'எஸ்பிஎப் 30' இருக்கும் சன் ஸ்கிரீன் மட்டுமே வெயிலில் பாதுகாப்பு தரும். நம் தோலுக்கு எது ஒத்துவரும் என்று பார்த்து, அதற்கேற்ப வேதிப்பொருட்கள், தாதுக்கள் அடங்கிய சன் ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்.

சில நேரங்களில், நாமாகவே, என் தோல் வறட்சியானது, எண்ணெய் பசை உள்ளது என்று முடிவு செய்து கிரீம்களை வாங்குகிறோம். இது தவறு. குறைந்தபட்சம் முதல் முறையாவது டாக்டரின் ஆலோசனை தேவை.

காரணம், ஒரே மாதிரியான தோல் அனைவருக்கும் இருக்காது என்பது ஒரு பக்கம், ஒருவரின் தோலே ஒரு இடத்தில் எண்ணெய் பசையாகவும் மற்ற இடத்தில் வறட்சியாகவும் இருக்க வாய்ப்புண்டு.

சமீப ஆண்டுகளில், பிக்மென்டேஷன் வருவது இளம் வயதினரிடம் அதிகமாக உள்ளது. ஹேர் டை, அழகுசாதனப் பொருட்கள், ஹேர் கலரிங் இவற்றில் உள்ள அமோனியா, பிபிடி - பாரபினைலின் டை அமின் டை, அழகுசாதனப் பொருட்களில் பவுண்டேஷன் அதிக நேரம் போடுவது, பேர்னெஸ் கிரீம்கள் உபயோகிப்பது இதற்கு முக்கியக் காரணம்.

பல தோல் டாக்டர்கள் ஆன்லைனில், சாலிசிலிக் அமிலம் போன்ற சில வேதிப் பொருட்களின் பெயர்களை சொல்லி, பொதுவாக அனைவரும் இதை உபயோகிக்கலாம் என்கின்றனர்.

பேஷ்வாசில் ஒரு சதவீத அடர்த்தியில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. 30 சதவீத அடர்த்தியில் 'ஜெல், கெமிக்கல் பீல்'லாக உள்ளது.

வெறுமனே சாலிசிலிக் ஆசிட் என்று சொல்லும்போது, நம் தோலுக்கு சரி வருமா என்று எதைப் பார்த்து, தேர்வு செய்வர்? அமிலத்தன்மை உள்ளவற்றை, டாக்டரின் ஆலோசனை இல்லாமல், உபயோகிப்பது பல நேரங்களில் ஆபத்தாக முடியலாம்.

முகப்பொலிவிற்காக விற்கப்படும் 'பிரைட்னிங் கிரீம்'களில் உடனடி தீர்விற்காக ஸ்டீராய்டு இருக்கும்.

இதைத் தொடர்ந்து பூசும்போது, தோல் வெளுத்துப் போய் அடர்த்தி குறையும். கிரீம் போடுவதை நிறுத்தினால், ஒன்று தோல் கருத்து விடும். அல்லது முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும்.

தொடர்ந்து ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்தினால் முகத்தில் முடி வளர்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.



டாக்டர் கே.ஆர். ஷர்மதாதோல் மருத்துவ ஆலோசகர், புரோமெட் மருத்துவமனை, சென்னை 94807 94807




      Our Apps Available On




      Dinamalar

      Follow us