பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த பிஞ்சுகள்!
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த பிஞ்சுகள்!
PUBLISHED ON : ஜூன் 08, 2026 08:49 PM

வழக்கம்போல்தான் விடிந்தது அந்த நாள். பிலிப்பைன்ஸின் அந்தப் பள்ளிக்கூடத்தில், வகுப்பறையின் சுவர்களில் குழந்தைகளின் மழலைச் சத்தமும், ஆசிரியரின் பாடம் நடத்தும் குரலும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. புத்தகப் பக்கங்களில் உலகை அளந்து கொண்டிருந்த அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரிந்திருக்கவில்லை, இன்னும் சில நிமிடங்களில் தங்கள் காலடி நிலமே தங்களை விழுங்கக் காத்திருக்கிறது என்று.
திடீரென பூமிப் பந்து ஆக்ரோஷமாக நடுங்கத் தொடங்கியது.
7,8 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கத்தால் வகுப்பறைச் சுவர்கள் அலறின; மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து குழந்தைகளின் தலைகளில் விழுந்தன. எங்கும் மரண பயத்தின் அலறல் சத்தம். ஆனால், அந்த இக்கட்டான நொடியிலும் ஆசிரியர்கள் நிதானத்தை இழக்கவில்லை; குழந்தைகளும் பதற்றமடையவில்லை.
குழந்தைகள் ஒருவரையொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு, திறந்தவெளி மைதானத்தை நோக்கி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினர். அவர்கள் ஓடிவந்து மைதானத்தின் புல்வெளியில் கால் பதித்த அடுத்த கணமே... ஒரு பெரும் சத்தத்தோடு அந்தப் பள்ளிக் கட்டிடம் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்து தரைமட்டமானது!
ஆம், குழந்தைகள் மைதானத்திற்கு வந்து தஞ்சமடைவதற்கும், கட்டிடம் இடிந்து விழுவதற்கும் சரியாக இருந்தது. இன்னும் ஒரே ஒரு நிமிடம் அவர்கள் வகுப்பறைக்குள் தாமதித்திருந்தால், அந்தப் பிஞ்சுகளின் எதிர்காலம் அந்த இடிபாடுகளுக்குள்ளேயே புதைந்துபோயிருக்கும்.
இடிந்து நின்ற கட்டிடத்தின் இடிபாடுகளையும், அதிலிருந்து கிளம்பிய தூசியையும் பார்த்த ஆசிரியர்களும் குழந்தைகளும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீரோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அது வெறும் மூச்சல்ல, அவர்களுக்குக் கிடைத்த மறுஜென்மம்!
இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனிதன் எவ்வளவு பலவீனமானவன் என்பதை இந்த நிலநடுக்கம் உணர்த்தியிருந்தாலும், அந்தப் பிஞ்சுகளின் உயிர் பிழைத்தல் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு நெகிழ்ச்சியான நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்த பிஞ்சுகளின் முகத்தில் இன்று மலர்ந்துள்ள அந்த நிம்மதிப் புன்னகை நிரந்தரமாக நீடிக்க வேண்டும்; இனி ஒருபோதும் இத்தகைய நிலநடுக்கப் பேரழிவுகள் எங்கும் ஏற்படாதிருக்க வேண்டும் என்பதே உலக மக்கள் யாவரின் நெஞ்சார்ந்த பிரார்த்தனையாகும்.
-எல்.முருகராஜ்.





