Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நிஜக்கதை/ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்: உலகிற்கு வழிகாட்டும் ருவாண்டா

ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்: உலகிற்கு வழிகாட்டும் ருவாண்டா

ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்: உலகிற்கு வழிகாட்டும் ருவாண்டா

1


PUBLISHED ON : மே 06, 2026 09:27 PM

Follow on Google

PUBLISHED ON : மே 06, 2026 09:27 PM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ருவாண்டா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நிலப்பரப்பால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு. இது ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதிக்கும் கிழக்குக் கடற்கரைக்கும் இடையில் உள்ளது. இதன் எல்லைகளாக உகாண்டா, தான்சானியா, புருண்டி மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. ருவாண்டா மக்கள் தொகையில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்கள் ஆவர்.Image 1573505வரலாற்று ரீதியாக இவர்களுக்குள் பெரிய வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், பெல்ஜிய காலனித்துவ ஆட்சியின் போது 'அடையாள அட்டை' முறை அறிமுகப்படுத்தப்பட்டு, துட்சி பிரிவினர் உயர்வாகவும் ஹூட்டு பிரிவினர் தாழ்வாகவும் சித்தரிக்கப்பட்டனர். இது இரு தரப்பினரிடையே தீராத கசப்புணர்வை ஏற்படுத்தியது.Image 1573506ஹூட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டா அதிபர் ஜுவெனல் ஹப்யாரிமனா பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார். இதற்குத் துட்சிகளே காரணம் என ஹூட்டு தீவிரவாதிகள் குற்றம் சாட்டிக் கலவரத்தில் இறங்கினர். 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த ருவாண்டா இனப்படுகொலை என்பது நவீன வரலாற்றின் மிகவும் கருப்பு அத்தியாயங்களில் ஒன்றாகும். வெறும் 100 நாட்களில் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்; பலர் கை கால்களை இழந்து ஊனமடைந்தனர். உகாண்டாவிலிருந்து செயல்பட்டு வந்த ருவாண்டா தேசபக்தி முன்னணி களமிறங்கிய பிறகே கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

நாட்கள் நகர்ந்த பிறகு, எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்துவிட்டோம் என்று உணர்ந்த மக்கள், 'கடந்ததை மறப்போம்; இனி நடப்பதை நினைப்போம்' என்று முடிவு செய்தனர். 'நமக்குள் இனி எந்தப் பிரிவினையும் இருக்கக்கூடாது; நாம் எல்லோரும் ருவாண்டா மக்கள்' என்ற ஒரே குடையின் கீழ் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உறுதிகொண்டனர்.

அந்த முடிவைப் படிப்படியாகச் செயல்படுத்தியதன் அடிப்படையில், இன்று உலகிலேயே நாடாளுமன்றத்தில் அதிக சதவீதப் பெண்களை (60 சதவீதத்திற்கும் மேல்) கொண்ட நாடு, பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்த நாடு, உலகிலேயே தூய்மையான தெருக்களைக் கொண்ட நாடு எனப் பல உலகப் புகழைப் பெற்றுள்ளது. குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருவதால், இது 'ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர்' என்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது இன்னுமொரு உலகப் புகழையும் ருவாண்டா பெற்றுள்ளது. போர்க்கால எச்சங்களாக நிலத்தில் புதைந்திருந்த கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு விபத்துகளால் உறுப்புகளை இழந்த இளைஞர்களுக்கு ஆதரவு தருவதன் மூலம், பெரும் பெருமையும் பெற்றுள்ளது.

உடல் ஊனமுற்றோருக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் ருவாண்டா அணிதான் (குறிப்பாகப் பெண்கள் அணி) இப்போது முன்னோடியாகவும் முதன்மை பெற்றதாகவும் விளங்குகிறது. இந்த வீரர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துப் பயிற்சி அளித்ததன் மூலம், சிறந்த கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்ட அணியாக உலகம் முழுவதும் வலம் வந்து நாட்டிற்குச் சிறப்பு சேர்க்கின்றனர். ஆப்பிரிக்க மாற்றுத்திறனாளிகள் கால்பந்து கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் இவர்கள், தற்போது சர்வதேசப் போட்டிகளுக்காகத் தயார் செய்யப்படுகின்றனர்.

ஊனத்தை உத்வேகமாக மாற்றிய ருவாண்டா வீரர்களின் பயணம் உலகிற்கே ஒரு சிறந்த பாடமாகும்.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us