150 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட இந்தச் சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கூடுகிறது. அதிகாலை 4:00 அல்லது 5:00 மணிக்கே தொடங்கும் இந்தச் சந்தை, மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.
இந்தச் சந்தை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுகிறது. இங்கு குறிப்பிட்ட வகை கோழிகள் மட்டுமன்றி லவ்பேர்ட்ஸ், விதவிதமான புறாக்கள், பின்ச்சஸ், ஜாவா ஸ்பாரோ மற்றும் காக்டெய்ல் போன்ற எண்ணற்ற வண்ணமயமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவை இனங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. மேலும், கோல்ட் பிஷ் முதல் பல்வேறு அரிய வகை நீர்வாழ் உயிரினங்கள், மீன் தொட்டிகள், மீன் உணவுகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவையும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
பறவைகள் மற்றும் மீன்கள் மட்டுமன்றி, லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட், ஸ்பிட்ஸ், பக் போன்ற பல்வேறு வகையான நாய் குட்டிகள், பூனைகள், முயல்கள் மற்றும் கினியா பன்றிகள் போன்ற விலங்குகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. செல்லப்பிராணிகள் தவிர, பல அரிய வகை மலர்ச் செடிகள், உட்புறச் செடிகள் (Indoor plants), இயற்கை உரங்கள், மண் மற்றும் தோட்டக்கலைக்குத் தேவையான உபகரணங்கள் விற்கும் ஒரு பெரிய சந்தையாகவும் இது திகழ்கிறது.
சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் இங்கு பெருமளவில் கூடுவதால், மற்ற சாதாரணக் கடைகளை விட இங்கு விலைகள் கணிசமாகக் குறைவாக இருக்கும். இதனால் வாங்குபவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பேரம் பேசி (Bargaining) பொருட்களை வாங்க முடியும். மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பெரிய அளவில் செல்லப்பிராணிகளை இனப்பெருக்கம் செய்பவர்கள் இங்கு வந்து கடைகளை அமைக்கிறார்கள். இவர்கள் வாராந்திர வருமானத்திற்காகவே இதை ஒரு முழுநேரத் தொழிலாகச் செய்து வருகிறார்கள்.
வியாபாரிகள் மட்டுமன்றிப் பொதுமக்களும் தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அதிகமாகும் போது, அவற்றை விற்பனை செய்வதற்காக இங்கு வருவதுண்டு. இதனால் நேரடியாகப் பிராணிகளை வளர்ப்பவர்களிடமிருந்தே நேரடியாக வாங்கும் நல்வாய்ப்பும் இங்குள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இடமே ஒரு திருவிழா போலக் காட்சியளிப்பதால் புகைப்படம் எடுப்பவர்கள், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருகின்றனர். இதனால் இது கொல்கத்தாவின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
-எல்.முருகராஜ்