/வாராவாரம்/சிந்திப்போமா/பரதக்கலைக்கு நல்ல எதிர்காலம்: 'கேரியர்' ஆகவும் கற்கலாம்பரதக்கலைக்கு நல்ல எதிர்காலம்: 'கேரியர்' ஆகவும் கற்கலாம்
பரதக்கலைக்கு நல்ல எதிர்காலம்: 'கேரியர்' ஆகவும் கற்கலாம்
பரதக்கலைக்கு நல்ல எதிர்காலம்: 'கேரியர்' ஆகவும் கற்கலாம்
பரதக்கலைக்கு நல்ல எதிர்காலம்: 'கேரியர்' ஆகவும் கற்கலாம்

சந்தியா சங்கர்
கட்டுரையாளர், பரத நாட்டியம் குறித்தஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். திருப்பூரில் சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம்நடத்தி வருபவர். கடந்த 2009 முதல், 1,500க்கும் அதிகமான பரதக் கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்களை உருவாக்கியவர். பரதக்கலை, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. தென்னகத்தின் பாரம்பரிய கலையான பரதம் உயர்ந்த மதிப்புள்ள கற்றல் கலையாக விளங்குகிறது. முந்தைய காலத்தில், பெண்களை பரதம் கற்க அனுப்பமாட்டார்கள். இன்று, பரதக்கலை, வாழ்வில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து அவசியம் கற்க வேண்டுமென பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். 'பத்து உருப்படிகளை' தனித்தனியாக ஆட, ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தேவை. அதற்கு, மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டும். சிறப்பு தகுதி பெற்று நடனமாட வேண்டியிருக்கும்.
தில்லானா 'க்ளைமாக்ஸ்'
சினிமாவில், 'கிளைமாக்ஸ்' போன்றது 'தில்லானா'; விறுவிறுப்பானது. இறுதியாக, காவடிச்சிந்து, மயிலாட்டம் போன்றவையும் அவசியம்; இவற்றை கற்றுத்தேர்ந்த பிறகுதான் சலங்கை பூஜை மேற்கொண்டு, அரங்கேற்றம் நடத்த வேண்டும். ஆடுவது எளிது என்றாலும், உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனை மிக அவசியம். பரதநாட்டியம் ஆடும் போது, அந்த பாத்திரமாகவே மாறிவிட வேண்டும்.
பாதை ஒழுங்காகும்
ஊருக்கு ஊர், சிவாலயங்களில் மூலவர் பெயர் மாறியிருக்கும். ஆனால், கனகசபையில் ஆடும் நடராஜர் பெயர் ஒன்றுதான். ஏனெனில், ஆடலுக்கு அரசனாக விளங்குபவர் நடராஜப்பெருமான். தாண்டவத்தில், 108 வகை தாண்டவங்கள் உள்ளன; அதற்கு பிறகு, ஏழு சிறப்பு தாண்டவம், சிவன் - பார்வதி ஆடும் தாண்டவங்களும் ஏராளமாக உள்ளன. பரதநாட்டியத்துக்கு உள்ளே வந்துவிட்டால், மற்ற அனைத்து நல்ல விஷயங்களும் தானாகவே வந்துவிடும். ஒழுக்கத்துடன் மாணவ, மாணவியர் உள்ளே வரும் போது, அவர்களது பாதை ஒழுங்கானதாக அமைந்துவிடுகிறது.
கல்வி மேம்படும்
பரதம் கற்க வரும் மாணவிகள், ஆடி பழகும் போது, கை, கால் அசைவுகளால், மூளை அதிக அளவு வேலை செய்யும். இரண்டு கரங்களில், மாறுபட்ட முத்திரைகளை மாற்றி காண்பித்து ஆட வேண்டும்; அதற்காக மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய துவங்கும். இதன் மூலம், வழக்கமான கற்றல் பணி எளிதாக மாறும்; தேர்வுகளில், வெற்றியாளராக மாற முடியும்.
உடல், மன உற்சாகம்
பரதக்கலைஞரை பொறுத்தவரை, எவ்வளவு துன்பம் வந்தாலும், எளிதாக கோபத்தை கையாண்டு, காய் நகர்த்திவிடுவார்கள். நாட்டிய கலையால், மனமும், உடலும் எப்போதும் உற்சாகமாகவே இருக்கும். நாட்டிய கலைக்கு வந்துவிட்டால், தானாகவே திறமைகள் வளர்ந்துவிடுகின்றன. இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிப்பது பரதநாட்டியம். பரத நாட்டியம் கற்றவருக்கு பள்ளி, கல்லுாரி பாடங்களும் எளிதாக மாறிவிடும். சிற்பங்களை பார்த்தாலே, அதன் வரலாறுகளை கூறும் அளவுக்கு, பரதக்கலைஞர் வல்லமை பெறுவர்.
மன அழுத்தம் இருக்காது
இளம் தலைமுறையினர், சிறு வயதில் இருந்தே பரதம் கற்கும் போது, மனம் பக்குவப்படுகிறது. கற்றலில் ஆர்வம் பெருகுவது போல், எத்தனை சோதனை வந்தாலும், மன அழுத்தம் இருக்காது. எப்படியெல்லாம், கோபத்தை கையாள வேண்டும் என்பது அத்துப்படியாகிவிடும்.
'அல்சைமர்' தொந்தரவு வராது
பரதநாட்டியம் பயின்ற பெண்களுக்கு, 40 வயதுக்கு மேல் வரும் தொந்தரவுகள் இருக்காது என்கிறது, அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வறிக்கை. பொதுவாக, பெண்களுக்கு, 40 வயதுக்கு மேல், ஞாபகமறதி ஏற்பட துவங்கிவிடும். 'அல்சைமர்', பரதம் ஆடுபவருக்கு வராது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


