
1,500 முதியோர் காப்பகங்கள்
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு, வங்கி கடன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன; இருக்கும் சில திட்டங்களும் போதுமானதல்ல.
இறுதி மரியாதை செய்ய கூட வருவதில்லை
முதுமையால் சம்பாத்தியத்தை இழக்கும்போது, உடல்வலு குறையும் போது வீட்டில் செல்லாக்காசாக பல நேரங்களில் துாக்கி வீசப்பட்டுவிடுகின்றனர். பாரமாக, தேவையற்ற சுமையாக பிள்ளைகள் பலரும் கருத துவங்கிவிடுகிறார்கள். வசதியற்றவர்கள் இலவச காப்பகங்களில் விட்டுவிடுகிறார்கள். சிலர் துரத்தி விடுகிறார்கள். ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு எங்களைப் போன்றவர்கள் பராமாரிக்கிறார்கள்.
உறவுகளை நினைத்து ஏக்கம்
காப்பக முதியோர் வெளிப்பார்வைக்கு நிம்மதியாக இருப்பது போன்று தோற்றமளித்தாலும் உறவுகளை நினைத்து அவர்கள் உள்ளுக்குள் உருகுவதை நாங்கள் நன்கறிந்திருக்கிறோம். முதியோர் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம் அவர்களுக்கு பயன்படாது. எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கும் மனமில்லை.


