தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/விரைவான நீதிக்கு புதிய சட்டம் சொல்வது என்ன!

விரைவான நீதிக்கு புதிய சட்டம் சொல்வது என்ன!

விரைவான நீதிக்கு புதிய சட்டம் சொல்வது என்ன!


UPDATED : டிச 27, 2023 08:35 AM

ADDED : டிச 27, 2023 03:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2023 08:35 AM ADDED : டிச 27, 2023 03:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர். சண்முகம்



கட்டுரையாளர், முதுகலை மற்றும் பி.எல்., பட்டம் பெற்றவர். குடும்ப நல வழக்குகள் மற்றும் சமூகப்பணி தொடர்பாக பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்கிறார். கோவை, பாரதியார் பல்கலையில் உள்புகார் குழு(ஐ.சி.சி) உறுப்பினராக உள்ளார். இரண்டு சட்ட நுால்களின் ஆசிரியர். தனியார் கல்லுாரிகளில் அகாடமிக் கமிட்டி உறுப்பினராக உள்ளார். கோவையில் வக்கீலாக பணியாற்றி வருபவர்.

சட்டம் என்ற அடித்தளம், சமுதாயம் என்கிற வீட்டை தாங்கி நிற்கிறது. அடித்தளம் சரியில்லை என்றால் வீடு சரிந்து விடும். ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவை, தற்போதைய காலகட்டத்தில் உள்ள குற்றங்களை எதிர்கொள்ளும் நோக்கில் இல்லை.

இதை மனதில் வைத்து, மத்திய அரசு, பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்கள் அடிப்படையில், மூன்று வகையான சட்டங்களை மாற்றியமைக்கும், புதிய சட்ட மசோதாவை பார்லிமென்டில், 2023, ஆக., 11ல் தாக்கல் செய்யப்பட்டு, டிச., 20ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி) -1860, 'பாரதிய நியாய சன்ஹிதா-2023' என்றும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) -1973, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா-2023' என்றும், இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஏ) -1872, 'பாரதிய சாக் ஷயா அதீனியம்-2023' என்றும் மாற்றப்படுகிறது.

மாற்றம் என்ன?


இந்த சட்டங்களின் சிறப்பு அம்சம், மக்களுக்கு தண்டனை என்பதை விட, விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 511 சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய தண்டனை சட்டம், 356 சட்டப்பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 175 சட்டப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது; 8 சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டும், 22 பிரிவு ரத்து செய்தும் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 484 சட்டப்பிரிவு உள்ளடங்கிய குற்றவியல் நடைமுறை சட்டம், 533 சட்டப்பிரிவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 160 சட்டப்பிரிவு மாற்றப்பட்டு, 8 புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது; 22 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

* 167 சட்டப்பிரிவு உள்ளடக்கிய இந்திய சாட்சிய சட்டம் திருத்தப்பட்டு, 23 பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு, 5 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் குற்ற வழக்குகளில் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வழக்குகள் 40 சதவீதம் உள்ளன. இவை, 'சம்மரி டிரையல்' என்று சிறு குற்ற வழக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் 40 சதவீத குற்ற வழக்குகள் விரைவாக தீர்வு காணப்பட உள்ளது.

90 நாளில் குற்றப்பத்திரிகை


குற்றவியல் வழக்கு விசாரணையில், தேடுதல் மற்றும் பறிமுதல் ஆகியவை முக்கிய பகுதிகள். இதில், 'வீடியோகிராபி' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட 'வீடியோகிராபி' இல்லாமல், குற்றப்பத்திரிகை செல்லாது. ஏழாண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றங்கள், சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் தரப்பை கேட்காமல், எந்த அரசும் வழக்கை தன்னிச்சையாக வாபஸ் பெற முடியாது.

குற்ற வழக்குகளில் போலீசார், ஆண்டுக்கணக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பர். ஆனால், புதிய சட்டத்தில், 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அனுமதித்தால் மட்டும் மேலும், 90 நாட்கள் கால அவகாசம் எடுத்து கொள்ளலாம். 180 நாட்கள் முடிந்தவுடன், குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரணை நடத்தியாக வேண்டும். சாட்சி விசாரணை, வாதங்கள் முடிந்து, 30 நாட்களில் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதிலிருந்து ஏழு நாட்களுக்குள் தீர்ப்பை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தண்டனை வழங்க வழிவகை


அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வரும் கோப்புகளின் மீது, 120 நாட்களில் முடிவு எடுக்கவில்லை என்றால், அனுமதி வழங்கப்பட்டதாக கருதி, நீதிமன்றங்கள் மேற்கொண்டு விசாரணையை தொடரலாம். பழைய சட்டத்தில், எதிரிகள் தலைமறைவானால் வழக்கு பல ஆண்டுகள் அப்படியே நிலுவையில் இருக்கும். ஆனால், புதிய சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தால், தொடர்ந்து விசாரணை நடத்தி தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு தேங்குவது குறையும்.

சட்டத்தின் நோக்கமே, சிறந்த நீதி வழங்குவது தான். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றம் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது. இதை நடைமுறைப்படுத்த இளைய தலைமுறையினரை தயார் செய்ய வேண்டும். இதற்கு ஒரே வழி, வாழ்வியல் சட்டத்தை பள்ளிகளில் கொண்டு வந்து குற்றம் இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும். அதற்கு முக்கியமான சட்டங்களை, ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு வாழ்வியல் சட்டங்களை கற்று தரும்போது, குற்றத்திற்கு என்ன தண்டனை என்று ஒவ்வொருவருக்கும் தெரிய வரும்போது, தவறு செய்வதற்கு பயப்படுவர். இதன் வாயிலாக, எதிர்காலத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

கடுமையான தண்டனை

 அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு, புதிதாக சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மாநிலங்களுக்கு இடையேயான குற்ற கும்பல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், புதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, அவருடன் உடல் ரீதியாக தொடர்பு ஏற்படுத்தி திருமணம் செய்யாமல் ஏமாற்றினாலோ, வேலை வாங்கி தருகிறேன் என்றோ, வேலையில் பதவி உயர்வு தருகிறேன் என்று கூறியோ பெண்ணை ஏமாற்றினால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு குறைந்த பட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள்சிறை மற்றும் அபராதம் விதிப்பதற்கும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை, அவர் விரும்பாத போது தொடர்பு கொண்டாலும், தொடர்பு கொள்ள முயற்சி செய்தாலும், இன்டர்நெட், இ-மெயில், அல்லது ஏதோ ஒரு எலக்ட்ரானிக் பொருட்கள் வாயிலாக, அந்த பெண்ணை பின் தொடர்ந்தால், மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மது குடித்துவிட்டு, பொதுவெளியில் தகராறு செய்வோருக்கு ஒரு நாள் சிறை மற்றும் அபராதத்தோடு, சமூக பணியில் ஈடுபடுத்தப்படுவர். மொபைல் போன் மற்றும் தங்க செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டு சிறை, சட்டப்படி திருமணம் செய்யாமல், பொய்யான திருமண சான்றிதழ் ஏற்படுத்தினால் ஏழாண்டு சிறை போன்ற திருத்தங்கள் புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us