தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்


PUBLISHED ON : ஜூலை 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊழல் இல்லாத நிர்வாகம்

அரசின் அதிரடி சரியானதே!

–––––––––

தமிழகத்தில் 2024- – 2025ம் நிதியாண்டில் லஞ்ச புகார்கள் தொடர்பாக, 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, லஞ்சம் வாங்கிய, 681 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், லஞ்சம் பெற்ற, 126 அதிகாரிகளுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே, ‘லஞ்ச, லாவண்யம் இல்லாத ஆட்சி அமைப்போம், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்கும்’ என, தற்போது முதல்வராக இருக்கும் விஜய் அறிவித்தார். நிச்சயமாக அந்த வாக்குறுதியை செயல்படுத்துவார் என, பொதுமக்கள் நம்பியதால், தேர்தலில் அவருக்கு அமோக வெற்றி கிடைத்தது.

அதுமட்டுமின்றி, முதல்வராக பதவியேற்ற பின் பேசிய விஜய், ‘மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட எடுக்க மாட்டேன். என் ஆட்சியில் உள்ளவர்கள் யாரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடவும் அனுமதிக்க மாட்டேன்’ என்றும் உறுதி அளித்தார்.

அந்த உறுதிமொழியை காப்பாற்றும் வகையில், சமீப நாட்களாக ஊழலை தடுக்க அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதில், லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் பறிமுதல் ஆகியுள்ளதுடன், அதிகாரிகள் பலர் மீதும், ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, லஞ்சம் வாங்கி குவிக்கும் வகையில், கூடுதலான திட்ட மதிப்பீடுகளுடன் கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட பல துறைகளின் டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் யாரும் லஞ்சம் வாங்காத வகையில், டெண்டர் நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இது, மக்கள் மத்தியில் ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், கைநீட்டும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக, ‘வாட் ஸாப்’ எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ‘இந்த விபரங்களை அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்’ என்றும், அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் பணி ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அதற்குள் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

பொதுமக்களும் இ- – சேவை மற்றும் இணையவழி சேவைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதை பயன்படுத்த முடியாத பாமர மக்களுக்கு உதவ, பிரத்யேக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே உள்ள நேரடி தொடர்பை குறைத்தாலே லஞ்சம் குறையும்.

மேலும், லஞ்சம் வாங்கி சிக்குவோர் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரி கையும் களவுமாக சிக்கி விட்டால், அவருக்கு எதிராக வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் வரை, அரசு தரப்பில், பாதி சம்பளம் வழங்குவது, ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கைகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

லஞ்சத்தை ஒழித்துக்கட்ட அரசு எடுத்துள்ள இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கு, பொதுமக்களும் பெருமளவு ஆதரவு தர வேண்டும். தங்களின் வேலைகள் நடந்தால் போதும் என கருதி, லஞ்சம் கொடுக்க முன்வருவதை தவிர்க்க வேண்டும்.

தாமதமாகும் பணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்யும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். அடுத்தடுத்து பல கட்டுப்பாடுகள் விதித்தால் மட்டுமே, லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியும். இதை முதல்வர் விஜய் அரசு தொடர்ந்து செய்யும் என, எதிர்பார்க்கலாம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us