Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மந்திர பூஜை மகிமை!

மந்திர பூஜை மகிமை!

மந்திர பூஜை மகிமை!

மந்திர பூஜை மகிமை!

ADDED : டிச 09, 2016 09:17 AM


Google News
Latest Tamil News
ஒருமுறை காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்த காஞ்சிப் பெரியவர் கஜபூஜை, கோபூஜை, அம்பாள் தரிசனம் செய்தார். பின் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இளைஞர் கண்ணன் சாஸ்திரி பெரியவரை வணங்கினார்.

அப்போது பெரியவர், “நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா?” என்றார்.

அதற்கு கண்ணன் சாஸ்திரி, “பெரியவா சொல்லுங்கோ.... நீங்க சொல்றதை செய்ய சித்தமா இருக்கேன்,” என்று பதிலளித்தார்.

அதற்கு பெரியவர், “நீ தினசரி அம்பாளுக்குரிய பஞ்சதசி, நவாக்ஷரி மந்திரம் சொல்லி பூஜை செய். பிரசாதத்தை மடத்திற்கு கொடுத்து அனுப்பு,” என்றார். மறுநாள் முதல் கண்ணன் சாஸ்திரியும் மந்திர பிரசாதத்தை பெரியவருக்கு அளித்து வந்தார்.

பெரியவர் சித்தியடைந்த அன்று காலையிலும் கண்ணன் சாஸ்திரி பிரசாதம் கொடுத்தார். அப்போது, “காமாட்சிக்கு செய்யும் இந்த கைங்கர்யத்தை (சேவை) நீ விட்டுடாதே,'' என்றும், ''காமாட்சி உனக்கு துணை இருப்பா. நீ அளித்த பிரசாதத்தால் தான் எனக்கு தெம்பு கெடச்சுது,” என்றும் சொல்லி

ஆசியளித்தார்.

அன்று பிற்பகலில் பெரியவர் சித்தியானதை அறிந்த கண்ணன் சாஸ்திரி கதறி அழுதார்.

“பெரியவாளுக்கு பிரசாதம் கொடுக்க நான் என்ன தவம் செய்தேனோ...” என்று அவரது உள்ளம் உருகியது. இன்றும் காஞ்சிபுரம் கோவிலில் கண்ணன் சாஸ்திரி பக்தர்களுக்கு பிரசாதம் அளித்து வருகிறார்.

மற்றொரு அதிசய சம்பவத்தையும் கேளுங்கள்.

சாதுர்மாஸ்ய விரத காலங்களில் (ஆனி புரட்டாசி மாதங்களில் துறவிகள் விரதம் இருக்கும் காலம்) காஞ்சி மடத்தில், திருவாரூர் மாவட்டம் திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை என்பவரின் நாதஸ்வர கச்சேரி நடப்பது வழக்கம். காஞ்சிப்பெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட இவர் ஒரு சமயம், காஞ்சிபுரம் வர இயலாமல் போனது. ஒரு கையும், காலும் விளங்காமல் போனதே அதற்கு காரணம். விஷயம் அறிந்த பெரியவர் அவரது கனவில் தோன்றி, “பயப்படாதே. நீ குணம் பெற்று முன் போலவே ஆவாய். ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அதில் குங்குமத்தைக் கலக்கிக் கொள். அதை கிழக்கில் இருந்து மேற்காக தினமும் உடம்பில் தடவு. தினமும் இதைச் செய்து வர விரைவில் குணம் பெறுவாய்,” என்று அருள்புரிந்தார்.

மகிழ்ந்த பிள்ளையும் அதன்படியே செய்ய அவரது உடல்நலம் பெற்றார். பெரியவருக்கு நன்றி தெரிவிக்க மடத்திற்கு நேரில் வந்தார். மனிதவடிவில் தோன்றிய தெய்வமான பெரியவரை வணங்கி ஆனந்தக்கண்ணீர் வடித்தார். அதன் பின் தன் இசைப்பணியையும் தொடர்ந்தார். பெரியவர் அவருக்கு ஒரு காமாட்சியம்மன் படத்தை பிரசாதமாக வழங்கினார்.

பெரியவர் அளித்த அந்த படத்தை பொக்கிஷமாக கருதி அவரது குடும்பத்தினர் பூஜித்து வருகின்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us