Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?

மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?

மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?

மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?

ADDED : டிச 23, 2016 10:47 AM


Google News
Latest Tamil News
மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர் லலிதா சகஸ்ரநாமம், சவுந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள். அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார்.

பாட்டி அம்பாளிடம், “அம்மா! உனக்கேது தங்க காசுமாலை... காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார்,” என்று கேட்டார்.

அதற்குப் பெரியவர், “நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் பண்ணச் சொல்றேன்,” என்று பதிலளித்தார்.

திகைப்புடன் பாட்டி, “ஏழையான நான் எப்படி காசுமாலை செய்ய முடியும்?” என்று கேட்டார்.

அதற்குப் பெரியவர், “உன்னால் நிச்சயம் முடியும்” என்று சொன்னார். அத்துடன் கனவு கலைந்து பாட்டி எழுந்தார்.

கனவில் பெரியவர் இட்ட கட்டளையை தன்னுடன் கோவிலுக்கு வரும் சகபெண்களிடம் பாட்டி தெரிவித்தார். அவர்கள் காஞ்சிபுரம் போய் பெரியவரிடமே இதுபற்றி விளக்கம் கேட்டு விடுவோமே'' என்றனர்.

'அதுவும் சரி தான்' என்ற பாட்டி, அவர்களுடன் காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்தார். தன் கனவு பற்றி தெரிவித்தார்.

பெரியவர் பாட்டியிடம், “காசுமாலை செய்ய ஆயிரம் காசுகள் வேணும். அம்பிகையின் ஆயிரம் திருநாமத்தையும் காசுக்கு ஒரு பெயராகப் பொறிக்கணும். ஒரு காசு அரை கிராம் வீதம் செய்தாலும் 500 கிராம் தேவைப்படுமே! என்ன செய்யப் போகிறாய்” என்றார்.

அப்போது பாட்டியுடன் வந்த பெண்களில் ஒருவர். தான் அணிந்திருந்த தங்க வளையல்களை நன்கொடையாக அளித்தார். இதுபற்றிய தகவல் வெளியே தெரிந்ததும் நடிகர் ஆர்.எஸ்.மனோகர், மேயர் ராமநாதனின் மனைவி லட்சுமி, உம்மிடி பங்காரு கண்ணன் போன்றவர்கள் பாட்டிக்கு உதவ முன் வந்தனர். விரைவில் காசுமாலை தயாரானது.

பாட்டி உள்ளிட்ட மயிலாப்பூர் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். ஒரு கூடையில் பழம், பூ, மஞ்சள், ரவிக்கை இவற்றுடன் காசு மாலையையும் வைத்து பெரியவரிடம் வழங்கி ஆசி பெற்றனர். அப்போது ஒரு பெண் குழந்தை பெரியவர் முன் வந்தது.

அவரிடம் பழம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் மறைந்தது. வந்தது அம்பாள் தான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

இதைக் கண்டு வியந்த பக்தர்கள் மயிலாப்பூர் புறப்பட்டனர். ஒரு நல்ல நாளில் கற்பகாம்பாளுக்கு காசுமாலை சாத்தி பரவசத்துடன் வழிபட்டனர். அப்போது கூட்டத்தைக் கடந்து ஒரு பசுமாடு சன்னிதிக்கு வந்தது. அம்பாளைக் கண் குளிர தரிசித்தபின் வந்த வழியே புறப்பட்டது. வியப்பில் ஆழ்ந்த பாட்டி உள்ளிட்ட பக்தர்கள் காஞ்சிபுரம் சென்றனர் பெரியவரிடம் நடந்ததை சொல்ல, அவர் நான் தான் கோ ரூபத்தில் (பசு வடிவில்) மயிலாப்பூர் வந்தேன்,'' என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பக்தர்களுக்கு ஆனந்தக்கண்ணீர் பெருகியது.

கனவில் தோன்றியது முதல் பசு வடிவில் சன்னிதிக்கு வந்தது வரை அனைத்தும் காஞ்சிப் பெரியவரின் லீலை என்பதை உணர்ந்த பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us