விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதலர்கள் தங்களது பார்ட்னர் சரியானவரா என்பதை ஆப் மூலம் நிர்ணயம் செய்வதும், அதனால் பாதிக்கப்படும் ஹீரோ அதன்பின் என்ன செய்கிறார் என்பது மாதிரியான கதையில் உருவாகி உள்ளது. வருகிற ஏப்ரல் 10ம் தேதியன்று திரைக்கு வருவதால் இதையொட்டி விக்னேஷ் சிவன் பேட்டி அளித்து வருகிறார்.
போடா போடி படம் விஜய்யின் துப்பாக்கி படத்துடன் போட்டியிட்டது குறித்து அவர் கூறியதாவது, 'போடா போடி' திரைப்படத்தின் இயக்குனராக நான் ஒப்பந்தம் ஆன போது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும் போது எனக்கு 27 வயது ஆகிவிட்டது. அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் 'துப்பாக்கி' படத்துடன் 'போடா போடி' வெளியானது. துப்பாக்கி படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் 12 நபர்களைச் சுட்டுக் கொல்வார். உண்மையில் அவர் சுட்டது 13 பேர். அந்த 13வது ஆள் வேறு யாருமில்லை நான் தான் என தெரிவித்துள்ளார்.
அதாவது ‛துப்பாக்கி' படத்துடன் தன் படம் வெளியாகி வரவேற்பு பெறாமல் போனதை தான் இப்படி கலகலப்பாக கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.