'டிஎன் 2026' பட வெளியீட்டிற்கு எதிராக வழக்கு
உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி, தம்பி ராமையா, இளவரசு, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள 'டிஎன் 2026' படம் இந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. படத்தின் டிரைலரில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை கிண்டலடிப்பது போல காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல். ரவி என்பவர் இப்பட வெளியீட்டிற்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் சார்ந்த சில விஷயங்கள் படத்தில் இருப்பதால் அது நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவரது மனுவில் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சி தலைவரான விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தை வெளியிட அனுமதிக்காத போது இப்படத்தை வெளியிடுவது சரியல்ல என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியான இன்னும் சில தினங்களே இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்குள் தீர்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர், மாநில தேர்தல் அதிகாரி, சென்சார் போர்டு, மும்பை, சென்னை ஆகியவற்றிற்கும் அக்ககட்சி சார்பில் படத்தை வெளியிட ஆட்சேபணை தெரிவித்தும், இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று குற்றம் சாட்டியும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படம் சென்சார் சான்றிதழையும் பெற்றுவிட்டது. தணிக்கை வாரியம் அனுமதி அளித்த படத்தை நீதிமன்றம் நிறுத்தி வைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.