உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' லீக் விவகாரம்: முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்

'ஜனநாயகன்' லீக் விவகாரம்: முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்


எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னையால் ரிலீசாகாமல் தள்ளிப்போனது. இடையே தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் சென்சார் முடிந்தாலும், சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படத்தை வெளியிட முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இணையதளங்களில் ஜனநாயகன் முழு படமும் லீக் ஆனது. இது விஜய் மற்றும் படக்குழு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் கடைசியாக சரத்குமார் நடித்த 'ஜக்குபாய்' படம் தான் ரிலீசாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் லீக் ஆனது. அதேபோல், ஜனநாயகன் படமும் ரிலீசாவதற்கு முன்பாகவே முழு படமும் லீக் ஆனதால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். முன்னணி நடிகர் ஒருவரின் படம் அதுவும், அவரது அரசியல் வருகை மற்றும் அவரது கடைசி படம் எனக் கூறப்பட்ட நேரத்தில் இப்படியொரு நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. ஆனால், திரையுலகை சேர்ந்த ஒருத்தரும் இதுப்பற்றி கருத்து கூறாமல் இருந்த வந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் முதல் ஆளாக ஜனநாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக வெளியானது குறித்து குரல் கொடுத்துள்ளார். 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், ரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டு பிரதிகளைத் தவிர்க்கவும். தியேட்டர்களில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கேயே பார்க்கவும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையாளர்களை மதியுங்கள், கடின உழைப்பை மதியுங்கள், இந்தத் துறையை மதியுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !