உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்சேதுபதி படத்தை தொடர்ந்து குஞ்சாக்கோ போபன் பட புரமோஷனிலும் டைரக்டர் மிஸ்ஸிங்

விஜய்சேதுபதி படத்தை தொடர்ந்து குஞ்சாக்கோ போபன் பட புரமோஷனிலும் டைரக்டர் மிஸ்ஸிங்


சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் 'முத்து என்கிற காட்டான்' என்ற வெப் சீரிஸ் வெளியானது. விஜய்சேதுபதியை வைத்து 'ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி' படங்களை இயக்கிய அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள இயக்குனரான மணிகண்டன் இதை இயக்கி இருந்தார். ஆனால் இந்த வெப் சீரிஸ் புரமோஷன் நிகழ்ச்சிகளின் போது மணிகண்டன் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக இயக்குனர் என்கிற பெயரில் அஜித் குமார் என்பவர் கலந்து கொண்டார். இந்த வெப் சீரிஸ் உருவாகும் போதே படக்குழுவினருக்கும் மணிகண்டனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகி விட்டார் என்றும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அஜித்குமார் இயக்கினார் என்றும் காரணம் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒரு துரோக சாகசரியத்தில்' என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் படத்தின் ஹீரோ குஞ்சாக்கோ போபன், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் மட்டுமே கலந்து கொண்டு வருகின்றனர். எந்த ஒரு புரமோஷன் நிகழ்விலும் படத்தின் இயக்குனரான ரதீஸ் பாலகிருஷ்ணன் பொதுவால் கலந்து கொள்ளவே இல்லை.

இத்தனைக்கும் இவர் குஞ்சாக்கோவை வைத்து 'ஏன்னா.. தான் கேஸ் குடு' என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர்தான். அது மட்டுமல்ல மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தை இயக்கியதும் இவர்தான். சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் கூறும்போது, “சில நேரங்களில் இப்படிப்பட்ட தவிர்ப்புகள் கூட படத்தை புரமோஷன் செய்யும் யுக்திகளில் ஒன்று தான் என்று கூறி சமாளிக்க முயற்சி செய்தார். ஆனால் அடுத்த பேசிய குஞ்சாக்கோ போபன், படப்பிடிப்பு துவங்கியதுமே இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது உண்மைதான். ஆனாலும் அதையெல்லாம் சரி செய்து படம் நல்லபடியாக முடிந்தது” என்று உண்மையை உடைத்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !