உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஜெயிக்கத் தவறிய ஜெயகாந்தனின் சினிமா “யாருக்காக அழுதான்?”

பிளாஷ்பேக்: ஜெயிக்கத் தவறிய ஜெயகாந்தனின் சினிமா “யாருக்காக அழுதான்?”


தமிழ் திரையுலகில் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய, தவிர்க்க இயலாத சில திரைப்படங்கள் இருக்கின்றது என்றால், அவற்றில் ஜெயகாந்தனின் திரைப்படங்களுக்கு என ஒரு தனி இடம் எப்போதும் இருப்பதுண்டு. “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “உன்னைப் போல் ஒருவன்” என திரைவடிவம் பெற்ற அவரது தலைசிறந்த கதைகளில் ஒன்றுதான் இந்த “யாருக்காக அழுதான்?”. இந்தக் கதையின் மீது பெரிய ஈர்ப்பு கொண்டிருந்த நடிகர் நாகேஷ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், இதை நாடகமாக எடுக்க விருப்பப்பட்டு, ஜெயகாந்தனை அணுகி, அதற்கான முயற்சிகள் மேற்கொண்டும் அது நிறைவேறாமல் போனது.

ஒரு தங்கும் உணவு விடுதியில் எடுபுடியாக வேலை செய்துவரும் ஒரு அப்பாவியின் மீது விழும் வீண் திருட்டுப் பழி. அதனால் அவன் படும் அல்லல்கள், மன வேதனைகளை உணர்வுப் பூர்வமாக காட்டி, பின் அவன் திருடவில்லை என்ற உண்மை தெரியவரும் போது, அவன் ஓ…வென கதறி அழுது, கண்ணீர் விடுவதுதான் இந்த “யாருக்காக அழுதான்?” திரைப்படத்தின் கதை. ஒரே ஒரு தங்கும் விடுதியில் நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு, மிக நேர்த்தியாக திரைக்கதை அதை;து, இயக்கியிருந்ததோடு, “ஆசிய ஜோதி பிலிம்ஸ்” என்ற பதாகையின் கீழ் தயாரித்தும் இருந்தார் ஜெயகாந்தன்.

இந்தக் கதையை நாடகமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகர் நாகேஷையே இந்தக் கதையின் நாயகனாக, ஜோசப் என்ற அந்த அப்பாவி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் படத்தின் இயக்குநரான ஜெயகாந்தன். இந்தப் படத்தில் வரும் தங்கும் உணவு விடுதியின் உரிமையாளர் கதாபாத்திரத்திற்காக, ஜெயகாந்தன் தனது நண்பரான நடிகர் எஸ் வி சுப்பையாவை அணுக, முழுக் கதையையும் கேட்ட நடிகர் எஸ் வி சுப்பையா, அந்த ஜோசப் கதாபாத்திரத்தில் வேண்டுமானால் நடிக்கின்றேன். இந்தக் கதாபாத்திரம் வேண்டாம் என கூற, பின்னர் அந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் டி எஸ் பாலையாவை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தார் இயக்குநர் ஜெயகாந்தன். நடிகர் டி எஸ் பாலையாவும் அந்தக் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து, தனது அபாரமான நடிப்பை வழங்கியிருப்பார்.

“நீர்க்குமிழி”, “எதிர்நீச்சல்”, “சர்வர் சுந்தரம்” என நடிகர் நாகேஷ் நாயகனாக நடித்திருந்த இந்த வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் இந்த “யாருக்காக அழுதான்?” ஒரு தனிச் சிறப்புக்குரிய திரைப்படமாகவே நாகேஷிற்கு அமைந்திருந்தது என்றால் அது மிகையன்று. அதுவரை ரசிகர்கள் கண்டிராத வேறு ஒரு நாகேஷை காணச் செய்ததோடு, அவரது கலைப் பயணத்தில் அவருக்கு மிக நெருக்கமான, ஓர் அழுத்தமான கதபாத்திரமாகவும் அமைந்ததுதான் இந்த 'ஜோசப்' என்ற அப்பாவி கதாபாத்திரம். நடிகர் நாகேஷ் தனது அபார உடல் மொழியால் பார்க்கும் பார்வையாளர்களின் இதங்களை கணக்கச் செய்து, கண்களில் நீர் வழியச் செய்திருப்பார்.

1966ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் நாகேஷ், கே ஆர் விஜயா, டி எஸ் பாலையா, எஸ் வி சகஸ்ரநாமம், வஹாப் காஷ்மீரி ஆகியோர் நடிக்க, கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருந்ததோடு சொந்தமாக தயாரித்துமிருந்தார் ஜெயகாந்தன். திரைக்கதை, இயக்கம், நடிகர்களின் பங்களிப்பு என அனைத்தும் வெகு அற்புதமாக அமைந்திருந்தும், இத்திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து, ஜெயிக்கத் தவறிய ஒரு ஜெயகாந்தனின் திரைப்படமாகத்தான் மாறியிருந்தது இந்த “யாருக்காக அழுதான்?” திரைப்படம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !