உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம்

பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம்


1960 காலகட்டங்களில் வெளிவந்து கொண்டிருந்த எம் ஜி ஆரின் திரைப்படங்களுக்கு அன்றைய திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு ஏகோபித்த வரவேற்பும், பெரிய எதிர்பார்ப்பும் நிறைந்திருந்த காலமாக இருந்ததென்றால் அது மிகையன்று.

படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், கதாநாயகி, படம் கருப்பு வெள்ளை திரைப்படமா? வண்ணத் திரைப்படமா? என்று அறிந்து கொள்ளும் ஆவல் ரசிகர்களிடம் மிகுந்திருந்த காலமாகவும் இந்த 1960 காலகட்டங்களைக் குறிப்பிடலாம். அந்த வகையில் 1960களின் பிற்பகுதியில் அதிக பொருட் செலவில் எம் ஜி ஆரே தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்து, இயக்குநர் கே சங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் வெற்றிச் சித்திரமாக வெளிவந்த திரைப்படம்தான் “அடிமைப் பெண்”.

பல சவால்களையும், சங்கடங்களையும் கடந்து உருவாக்கப்பட்ட இந்த “அடிமைப் பெண்” திரைப்படம், இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷெர்ஹாட் பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணற்பரப்பைத் தவிர வேறொன்றும் தெரியாத இந்த பாலைவனத்தில், தங்குவதற்கு வசதியான இடங்கள் கிடையாது, சாப்பிட நல்ல ஓட்டல்கள் கிடையாது, ஏன் குடிக்க சரிவர தண்ணீர் கூட கிடைக்காது.

மேலும் வியர்வையால் குளிப்பாட்டிவிடும் அளவிற்கு பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயில். இரவில் நரிகளின் ஊளைச் சத்தம் ஒருபுறம் என்றால், ஒட்டகங்களின் காலிலும், கழுத்திலும் கட்டப்பட்டிருக்கும் சலங்கைகள் எழுப்பும் 'சலங்…சலங்…” சப்தமும் இணைந்து புதிதாக அங்கு செல்பவர்களை குலை நடுங்கச் செய்துவிடும். மேலும் அங்குள்ள சிலர் சர்வ சாதாரணமாக காணப்படும் கொடிய விஷங்கொண்ட பாலைவனப் பாம்புகளைப் பற்றி படக்குழுவினரிடம் சொல்ல, பயம் அதிகரித்திருந்த நிலையில், எம் ஜி ஆர் மட்டும் குறிப்பிட்ட சில காட்சிகளை அங்குதான் எடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.

எவ்வளவு பயங்கரமான இடமாக இருந்தாலும் சரி, எவ்வளவு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் சரி, தான் நினைத்திருந்தபடி படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்த எம் ஜி ஆருக்கு இந்த சிரமங்கள் எல்லாம் பெரும் சவாலாகவே இருந்தாலும், அவற்றை எல்லாம் புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டு, தன்னோடு வந்தவர்கள் யாரையும் கூடுமானவரை இந்த சிரமங்கள் எதையும் சந்திக்காதவாறும் பார்த்துக் கொண்டிருந்தார்.

தண்ணீரே கிடைக்காத அந்த பாலைவனத்திற்கு நாற்பது மைல் தூரத்திலிருந்து இளநீரும், கோகோ கோலா பானமும் வேண்டிய அளவிற்கு வரவழைத்து, படக்குழுவினருக்கு எந்த சிரமும் ஏற்படாதவாறு முன்னேற்பாடுகளை திட்டமிட்டு செய்திருந்தார் எம் ஜி ஆர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகக் கூட்டம் சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் காலையிலேயே படமாக்கச் சொல்லிவிடுவார் எம் ஜி ஆர்.

ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் இந்த ஒட்டகங்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் வாடகை. அதில் சவாரி செய்பவர்களுக்கு தனிச் சாப்பாடு. வேறு மொழி ஏதும் அறியாத அவர்களிடம் ஒவ்வொன்றையும் ஹிந்தியில் சொல்லித்தான் விளங்க வைக்க வேண்டும். சினிமா பற்றி அதிகம் அறிந்திராத, படப்பிடிப்புப் பற்றி துளியும் தெரிந்திராத அவர்களை எப்படி நடிக்க வேண்டும் என படப்பிடிப்புக் குழுவினர் பொறுமை இழக்கா வண்ணம் சொல்லிக் கொடுத்து, படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு, எம் ஜி ஆர் என்ற அந்த மாபெரும் கலைஞனின் புன்முறுவலோடு கூடிய விடா முயற்சியும், தன்னம்பிக்கையுமே ஆதாரம் என்றால் அது மிகையன்று. 1969ம் ஆண்டு வெளிவந்த இந்த “அடிமைப் பெண்” திரைப்படம், அந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு சினிமா விருதினை வென்றதோடு, வசூல் ரீதியாக ஒரு மாபெரும் சாதனை வெற்றியையும் பதிவு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !