கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கருணாஸின் மகன் கென் கதாநாயகனாக நடித்து முதன்முறையாக டைரக்ஷனும் செய்த யூத் திரைப்படம் வெளியானது. பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் வாழ்க்கையில் காதல் எப்படி புகுந்து கொண்டு அவர்களை குழப்புகிறது, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்து குடும்ப சூழ்நிலை உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள் என இளமை துள்ளலடன் ஒரு மெசேஜையும் இந்த படத்தில் சொல்லியிருந்தார் கென் கருணாஸ்.. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனரும், நடிகருமான காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி யூத் படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை தெரியப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படம் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன் என்றால் அது யூத் படம் தான். அன்பு, நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கி உருவாகியுள்ள இந்த படம் அனைத்து பெற்றோர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியான காணிக்கையாகும். படத்தின் கதை, இயக்கம் மற்றும் நடிப்பு மூன்றையும் ஒருவரே ஏற்றுக் கொண்டு அத்தனை நுணுக்கமான ஆழத்துடன் கையாண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடியது.
சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி மற்றும் நாயகனின் நண்பர்கள் குழுவினர் என ஒவ்வொருவரும் திரையில் மிக இயல்பாக உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளதால் படம் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள ரிஷப் ஷெட்டி, இறுதியாக “'கென் கருணாஸ் பிரதர்.. நீங்கள் சினிமாவில் மிகப்பெரிய சொத்தாக இருக்கப் போகிறீர்கள்” என்றும் பாராட்டியுள்ளார்.