'அரசன்' படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது
வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் படம் 'அரசன்'. இப்படம் ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு விதமான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் படம் 'டிராப்' என்றெல்லாம் கூட வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தும் அளவிற்குச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்து பெற்ற முன்பணத் தொகையை சிம்பு தந்தாக வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை சம்பந்தப்பட்ட சங்கங்களே நிறுத்தின. அதன்பின் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. அது ஆரம்பமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காக படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இனியாவது எந்தவிதமான தடையும் இல்லாமல் படம் முடிய வேண்டும் என சிலம்பரசன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.