தெலுங்கு படத்தில் 'மம்மி' வில்லன்
புகழ்பெற்ற ஹாலிவுட் படம் 'மம்மி'. இந்த படம் பல பாகங்களாக வெளிவந்திருக்கிறது, வெப் தொடர்களாகவும் வெளியாகி உள்ளது. மம்மி படத்தில் நடித்த பிரபலமான வில்லன் அர்னால்ட் வோஸ்து. ஹாலிவுட் நடிகர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பெரிய சம்பளம் கொடுத்து நடிக்க வைப்பது தற்போதைய டிரெண்ட். அந்த வரிசையில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் 'ரணபாலி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் 'மம்மி' வில்லன் இந்திய சினிமாவிற்கு வருகிறார்.
'ரணபாலி' தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. மம்மி வில்லன் இந்த படத்தில் சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறும்போது, “நான் வளர்ந்த காலத்தில் 'மம்மி', எனக்கு எப்போதும் பிடித்த படங்களில் ஒன்றாக இருந்தது. அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வில்லன் கதாபாத்திரம்தான், கொடியவர்கள் நிஜமாகவே இருக்க முடியும் என்று என்னை நம்ப வைத்தது. பல வருடங்களுக்குப் பிறகு என் சிறுவயதில் எனக்குப் பிடித்த அந்த வில்லனுடன் விதி என்னை நேருக்கு நேர் கொண்டு வந்து நிறுத்தும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பாக்கியம். இந்த உலகம் அறிந்த சிறந்த நடிகரையும் தாண்டி, நான் இதுவரை பணியாற்றியதிலேயே மிகவும் அன்பான, கனிவான மற்றும் பொறுமையான கலைஞர் அவர். இந்திய சினிமா என்ற உன்னத உலகுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். 'ஹெக்டர்க் கதாபாத்திரமாக நீங்கள் உருவாக்கியுள்ள அந்த மேஜிக்கை காண இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.