போதைப்பொருளுக்கு எதிரான ஆபரேஷன் : தூபான் வாரியராக மாறிய மோகன்லால்
கேரளாவில் சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதை தடுப்பதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள கேரள அரசு 'ஆபரேஷன் தூபான்' என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. கேரள காவல்துறை மற்றும் களால் துறை இணைந்து இந்தப் பிரச்சாரத்தின் மூலம் அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளன.. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தற்போது இதில் நடிகர் மோகன்லால் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, இளைஞர்களுக்கு ஒரு வீடியோ மூலமாக செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, போதைப்பொருளுக்கு எதிரான இந்த மிகப்பெரிய போரில் நானும் ஒரு தூபான் வாரியராக பெருமையுடன் இணைந்து கொள்கிறேன். இது வெறும் அரசாங்கத்தின் அல்லது காவல்துறையின் வேலை மட்டுமல்ல; நம் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் இல்லாத சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இளைஞர்கள் போதைப்பொருள் தரும் தற்காலிக போலி மகிழ்ச்சிக்கு அடிமையாகி வாழ்க்கையை அழித்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்..