'ஏக் தோ தீன்' பாடலுக்கு பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பின்னணி பாடிய சூர்யா!
'கருப்பு' படத்தின் வெற்றிக்கு பிறகு 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையைமைத்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஜி.வி., அதில், இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் 'யூத்' படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான கென் கருணாஸ் ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்த துள்ளலான பாடலை சூர்யா பின்னணி பாடியுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படத்தில் இடம்பெற்ற 'ஏக் தோ தீன்' என்ற பாடலுக்கு பிறகு ஜி. வி .பிரகாஷ் குமார் இசையில் மீண்டும் பின்னணி பாடியிருக்கிறார் சூர்யா. இந்த பாடலின் வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'பட்டாம்பூச்சி' என்ற முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு சூர்யா பாடியுள்ள இந்த பாடல் எனர்ஜிடிக் டான்ஸ் நம்பர் ஒன் ஆக இருக்கும் என்று ஜி.வி. பிரகாஷ் குமார் குறிப்பிட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து சூர்யா ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உற்சாகமான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.