ஜானகி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, நேற்று (ஜூலை 11) வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மைசூரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் தெரிவித்த இரங்கல் செய்தி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார்.
காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இணையற்ற கருணையுடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் அவர் தனது குரல்வளம் மூலம் வெளிப்படுத்தினார். அவரது இனிமையான பாடல்கள் வரும் காலங்களிலும் கேட்போரை மயக்க வைக்கும்.
துயரமான இந்தத் தருணத்தில், அவரது குடும்பத்தினர், எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.