உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்த மறைவுகளால் தவிக்கும் தமிழ் சினிமா

அடுத்தடுத்த மறைவுகளால் தவிக்கும் தமிழ் சினிமா


2026ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சோகமான ஆண்டாக கடந்து போய் உள்ளது. சில முக்கிய சினிமா பிரபலங்கள் இந்த ஆண்டில் இதுவரையில் மறைந்து போய் இருக்கிறார்கள். அனைவருமே தமிழ் சினிமாவை தனி இடத்தில் ஏற்றி வைத்தவர்கள். அவர்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்கள்.

எஸ்பி வெங்கடேஷ்

இசையமைப்பாளர் எஸ்பி வெங்கடேஷ் என்கிற சங்கீதராஜன் இந்த வருடம் பிப்ரவரி 3ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார். தமிழில் சங்கீதராஜன் என்ற பெயரில் தியாகராஜன் நடித்த 'பூவுக்குள் பூகம்பம்' படத்திற்க முதலில் இசையமைத்தார். தொடர்ந்து 'காவல் பூனைகள், பாட்டாளி மகன், 13ம் நம்பர் வீடு, சேலம் விஷ்ணு, நண்பர்கள், விக்னேஷ்வர், இதுதான்டா சட்டம், பீஷ்மர், முனி (பின்னணி இசை), ஒற்று” ஆகிய படங்களுக்கு இசையைமைத்துள்ளார். தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஆகிய மொழிகளில் பணியாற்றி இருந்தாலும் மலையாளத்தில்தான் அதிகப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்களுக்கு ஆலமரம் ஆக இருந்தவர் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. கடந்த மே மாதம் 5ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த வாகன விபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 100 படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளிலும் படங்களைத் தயாரித்தவர். அவர் அறிமுகப்படுத்திய இயக்குனர்களால் தமிழ் சினிமா பல கால கட்டங்களில் தலை நிமிர்ந்துள்ளது.

இயக்குனர் பாரதிராஜா

தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இயக்குனர்களில் முதன்மையானவர். ஸ்டுடியோக்களிலேயே சுற்றி வந்த தமிழ் சினிமாவை இயற்கை அழகினை ரசிக்க வெளியுலகத்திற்குக் கொண்டு வந்தார். இவர் அளவுக்கு தமிழகத்தின் அழகிய கிராமங்களை, சமுதாயக் கருத்துக்களை முன்னிறுத்திய இயக்குனர்கள் யாரும் இல்லை என்று கூட சொல்லலாம். வயது மூப்பு காரணமாக ஜுன் 10ம் தேதி சென்னையில் காலமானார்.

இயக்குனர் கே பாக்யராஜ்

இந்தியத் திரையுலகத்தின் திரைக்கதை மன்னன் என்றழைக்கப்பட்டவர் பாக்யராஜ். இயக்குனராக, நடிகராக, இசையமைப்பாளராக அவரது திரைப்பயணம் தனித்துவமானது. அவர் எழுதிய கதைகள் தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. குருநாதர் பாரதிராஜா இறந்த ஒரு மாதத்திற்குள்ளாக அவரது சிஷ்யர் பாக்யராஜும் காலமானது தமிழ்த் திரையுலகினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஜுன் 27ம் தேதியன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

ஒளிப்பதிவாளர் ஆர் செழியன்

தமிழ் சினிமாவின் தரமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என அறியப்பட்டவர். நல்ல எழுத்தாளரும் கூட. 'டூ லெட்' என்ற படத்தை இயக்கியதற்காக 2019ம் ஆண்டில் தமிழில் சிறந்த திரைப்படத்திற்காக விருது பெற்றவர். 'கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேவி, தாரை தப்பட்டை, ஜோக்கர்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஜுலை 10 அன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

பின்னணிப் பாடகி எஸ் ஜானகி

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். அந்தந்த மொழியிலும் அதன் உச்சரிப்பு மாறாமல் பாடி அந்தந்த மொழிக்காரர்களின் மனதில் இடம் பிடித்தவர். எஸ் ஜானகி ஹிட்ஸ் என்று தனி ஆல்பம் தொகுக்கும் அளவிற்கு நூற்றுக்கணக்கான தனிப் பாடல்களைப் பாடியவர். இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் பாட யாருமேயில்லை. நேற்று இரவு வயது மூப்பு காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் காலமானார்.

ஒரு பிரபலத்தின் மறைவு ஏற்படுத்திய வருத்தங்கள் மறைவதற்கு முன்பாகவே அடுத்த பிரபலத்தின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகவே இவர்களின் நினைவு கூறும் வீடியோக்களையும், தகவல்களையும், கட்டுரைகளையும் நிறைய காண முடிகிறது. நேற்று மறைந்த ஜானகியின் பேட்டிகள், பாடல்கள், வீடியோக்கள் என நிறைய பகிரப்பட்டு வருகிறது.

அரையாண்டிலேயே அழுத்தமான சோகத்தை காலம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அதிலிருந்து தமிழ் சினிமா மீண்டு வரட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !