ரியல் போலீஸ் அதிகாரியின் பயோபிக்கில் நடிக்கும் ஜான் ஆபிரகாம்
பாலிவுட்டில் அதிக அளவில் போலீஸ் கதாபாத்திரங்களில் ஆர்வமாக நடிப்பவர் யார் என்றால் நடிகர் ஜான் ஆபிரகாம் தான். அந்த அளவுக்கு போலீஸ் கதைகளில் தீவிர ஆர்வம் காட்டி வரும் ஜான் ஆபிரகாம், தற்போது ரியல் போலீஸ் அதிகாரி ஒருவரின் பயோபிக்கிலேயே நடிக்கிறார். மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவின் 'லெட் மீ சே இட் நவ்' (Let Me Say It Now) என்கிற வாழ்க்கை வரலாற்று நூலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படத்தில் தான் அவரது கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார்.
போலீஸ் படங்களை இயக்குவதற்குப் பெயர் பெற்ற இயக்குனர் ரோஹித் ஷெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு மற்றும் 26/11 தாக்குதல் போன்ற சம்பவங்களில் தீவிரமாக பணியாற்றியவர் தான் இந்த ராகேஷ் மரியா. மும்பையின் 38வது போலீஸ் கமிஷனராக இருந்த இவர், கிட்டத்தட்ட 36 வருடங்கள் காவல்துறையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.