இரண்டாவது படத்திலேயே மோகன்லாலை இயக்கும் இளம் இயக்குனர்
நடிகர் மோகன்லால் மலையாளத்தில் தற்போது 'அதி மனோகரம்', 'நெடுங்கண்டம் மிராக்கிள்' மற்றும் 'கலிபா' ஆகிய படங்களிலும் தமிழில் 'ஜெயிலர் 2' படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்த 'மஸ்திஸ்கா மரணம்' என்கிற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கிரிஷாந்த் என்பவர் இயக்கி இருந்தார். இவரது அடுத்த படத்தில் தான் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை மோகன்லாலின் 40 ஆண்டுகால நண்பரும் குணச்சித்ர நடிகருமான மணியன்பிள்ள ராஜு என்பவர் தயாரிக்கிறார்.
இவரது மகனான நிரஞ்ச், 'மஸ்திஸ்கா மரணம்' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த சமயத்தில் கிரிஷாந்த் சொன்ன ஒரு கதை தயாரிப்பாளர் மணியன்பிள்ள ராஜுவை கவர்ந்ததால், தனது நண்பரான மோகன்லாலிடம் அந்த கதையைச் சொல்ல வைத்து, அவரே கதாநாயகனாக நடிக்க சம்மதமும் வாங்கி விட்டாராம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான 'சோட்டா மும்பை' பாணியில் ஒரு கமர்சியல் ரியாலிஸ்டிக் காமெடியாக இந்தப் படம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.