அரசியலுக்கு வருகிறாரா ஜூனியர் என்டிஆர்? வதந்திக்கு முற்றுப்புள்ளி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர். தற்போது அவர் நடிப்பில் டிராகன், தேவரா 2 மற்றும் காட் ஆப் வார் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. ஆந்திராவில், ரா என்.டி.ஆர் என்ற சுயாதீன அமைப்பு, கிராமப்புற மேம்பாட்டை நோக்கமாக கொண்டு ஊரு வாடா என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஆனால் இதை ஜூனியர் என்டிஆரின் அரசியல் வருகைக்கான அடித்தளம் என சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அடிமட்ட அளவில் மேற்கொண்ட மக்கள் பணிகளோடு இதனை ஒப்பிட்டு பலரும் பேசி வருகிறார்கள்.
வருகிற ஜூலை 18ம் தேதி அன்று ஜூனியர் என்டிஆர் தனது அரசியல் வருகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும், ஆங்காங்கே அவரை சிஎம் என்டிஆர் என வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டு செய்திகள் காட்டுதீயாய் பரவி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆரின் அலுவலகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜூனியர் என்டிஆருக்கும், ரா என்டிஆர் அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. அது வேறு நபரின் அமைப்பு ஆகும். அதனால் அந்த அமைப்பை ஜூனியர் என்டிஆரின் அமைப்பு என்று யாரும் குழம்பிக் கொள்ள வேண்டாம்.
மேலும், ஜூனியர் என்டிஆர் தரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொண்டு நிறுவனப் பணிகளோ, மக்கள் நலத்திட்டங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாக இருந்தாலும் அவரது சொந்த அதிகாரப்பூர்வ ஊடக பக்கங்கள் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். அதனால் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.