பிளாஷ்பேக் : எம்ஜிஆர் தங்கையாக நடித்த பத்மினி
பொதுவாக ஹீரோக்கள், தனக்கு ஜோடியாக நடித்த நடிகைகளை சகோதரியாக நடிக்க வைப்பது ரொம்பவே அபூர்வம். ஆனால் இதற்கு விதிவிலக்காக சில படங்களும் உண்டு. சிவாஜி - பத்மினி ஜோடிதான் 'மேட் பார் ஈச் அதர்'. ஆனாலும் எம்ஜிஆர் - பத்மினி ஜோடியும் பல படங்களில் ஜொலித்தார்கள். மன்னாதி மன்னன், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்கள் இருக்கிறது.
ஆனால் 'அரசிளங்குமரி' படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக நடித்தார் பத்மினி. விவசாயியான எம்ஜிஆரின் தங்கை பத்மினியை நாட்டின் தளபதியான நம்பியார் தன்னை ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி காதலித்து பத்மினியை ஏமாற்றி விடுவார். அதன்பிறகு மன்னனின் மகளை மணந்து நாட்டை கைப்பற்ற முயற்சிப்பார். நம்பியாரின் முயற்சியை முறியடித்து அவரை தன் தங்கையோடு எப்படி எம்ஜிஆர் சேர்த்து வைப்பார் என்பதுதான் படத்தின் கதை.
இதில் எம்ஜிஆர் உடன் ராஜசுலோச்சனா, முத்துராமன், தங்கவேலு, சாண்டோ சின்னப்பா தேவர், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். கருத்து வேறுபாடு காரணமாக பாதியில் அவர் விலகிக் கொள்ள மீதி படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கினார். ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.
இயக்குனர் மாற்றம், காலதாமதம், எம்ஜிஆர் தங்கையாக பத்மினி நடித்தது உள்ளிட்ட காரணங்கள் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.